கட்டண பாக்கியை செலுத்தினால் மட்டுமே மின் இணைப்பு: தனியார் நிறுவனத்தின் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி


சென்னை: 'முன்னாள் உரிமையாளர், மின் கட்டண பாக்கி வைத்திருந்தாலும், அதை செலுத்தாமல், புதிய உரிமையாளர், மின் இணைப்பு பெற முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விண்ணப்பம்:




புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் கிராமத்தில் உள்ள, 'ஆம்னி பியூஷன் டெக்னாலஜி' நிறுவனத்தின் பங்குதாரர், தாக்கல் செய்த மனு: எங்கள் நிறுவனம், விராலி மலை பஞ்சாயத்தில் உள்ள, குமாரமங்கலம் கிராமத்தில், 2007ல், 6.72 ஏக்கர் நிலம், வாங்கியது. அந்த இடத்துக்கு, மின் இணைப்பு கேட்டு, புதுக்கோட்டை மின் வினியோக வட்டத்தில், விண்ணப்பித்தோம். அதை, மின் வாரியம் நிராகரித்தது. ஏற்கனவே, அதே இடத்தில் இயங்கி வந்த, இரண்டு நிறுவனங்கள் பெற்றிருந்த மின் இணைப்புக்காக, மின் கட்டண பாக்கி வைத்துள்ளதால், புதிய இணைப்பு தர முடியாது என, கூறப்பட்டது. பழைய நிறுவனங்கள் வைத்துள்ள கட்டண பாக்கி பற்றி எங்களுக்கு தெரியாததால், மீண்டும் இணைப்பு கேட்டு, விண்ணப்பித்தோம். 'மின் கட்டண பாக்கியை செலுத்தாமல், புதிய இணைப்பு தர முடியாது' என, திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. எனவே, புதுக்கோட்டை மின் வாரிய கண்காணிப்பு பொறியாளரின் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். எங்களுக்கு மின் இணைப்பு வழங்க, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மின் வாரியம் சார்பில், வழக்கறிஞர்கள் ஜானி பாஷா, ஸ்ரீமதி, ''இரண்டு தொழிற்சாலைகள் இயங்கிய இடத்தை, மனுதாரர் நிறுவனம் வாங்கி உள்ளது. இடத்தை வாங்குவதற்கு முன், அதன் உரிமையாளர், ஏதாவது பாக்கி வைத்திருக்கிறாரா என, வாங்குபவர் சரிபார்த்திருக்க வேண்டும். பாக்கியை செலுத்தாமல், மின் வினியோகம் செய்ய முடியாது,'' என்றனர்.


மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: ஒரு இடத்துக்கு வழங்கப்பட்ட மின் இணைப்புக்காக, முன்னாள் உரிமையாளர் கட்டணம் செலுத்தவில்லை என்றால், அந்த இடத்தை வாங்கியவர், கட்டணத்தை செலுத்தினால் தான், அதே இடத்துக்கு புதிய மின் இணைப்பு வழங்கப்படும் என, மின் வாரியம் நிபந்தனை விதிக்க முடியும்.

நிபந்தனைகள்:




சுப்ரீம் கோர்ட், ஒரு வழக் கில், இதை தெளிவுபடுத்தி உள்ளது. தமிழக மின் வாரியத்தின் நிபந்தனைகளில், கட்டணப் பாக்கியை செலுத்தாதவர்களுக்கு, மின்சாரம் வழங்குவதை மறுக்கும் உரிமை, வாரியத்துக்கு உள்ளது என கூறப்பட்டுள்ளது. எனவே, மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வழக்கில் எழுப்பப்பட்டுள்ள பிரச்னையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அனைத்து கண்காணிப்பு பொறியாளர்களுக்கும், இந்த உத்தரவை, மின் வாரிய தலைவர் அனுப்ப வேண்டும். கட்டணப் பாக்கி செலுத்ததாதற்காக, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டவர்களிடம் இருந்து கட்டணப் பாக்கியை செலுத்தும்படி, கண்காணிப்பு பொறியாளர்கள் வலியுறுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், அதே இடத்துக்கு புதிய இணைப்பை, இடத்தை வாங்குபவர்கள் பெற முடியும். இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click