தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை நிலவுவதால் அவற்றை சரிசெய்ய அரசு பல்வேறு புதிய திட்டங்களை தீட்டி செயல்படுகிறது. இதன் காரணமாக புதிய திட்டங்களின் மூலம் அதிக அளவு மின் உற்பத்தி செய்யப்படுவதால் மின்தட்டுப்பாடு ஓரளவு குறைந்துள்ளது.
ஆனாலும், வியாபார நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு அதிக அளவு மின்சாரம் தேவைப்படுவதால் கூடுதல் தேவையை சமாளிக்க மின்வாரியம் திணறி வருகிறது.
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய மின்உற்பத்தி நிலையங்கள் கொண்டு வரப்படும் சூழ்நிலையில் மின்வாரியத்துக்கு ஆலோசனை வழங்க மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின்சார தேவை மேலாண்மை தொடர்பான ஒழுங்கு முறையில் திருத்தங்களை செய்துள்ளது.
இதன்படி ஒழுங்கு முறை ஆணைய செயலாளர் தலைமையில் 11 பேர் கொண்ட கமிட்டியை அமைக்க உத்தரவிட்டுள்ளது. இந்த கமிட்டியில் ஒழுங்கு முறை ஆணைய செயலாளர், மின்வாரிய மின் தேவை மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு மின் பகிர்மான கழக தலைமை பொறியாளர், மின்விநியோக தலைமை பொறியாளர், அரசு தலைமை மின் ஆய்வாளர், தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை பொது மேலாளர் ஆகிய 6 பேர் இடம் பெறுவார்கள்.
இவர்களுடன் கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்கள், வேளாண்மை மற்றும் மின்துறையில் சிறப்பு அனுபவம் பெற்ற பிரதிநிதிகளும் பொதுமக்களின் சார்பாக 5 பேர் உறுப்பினர்களாக இடம் பெறலாம்.
இதில் பொது மக்கள் உறுப்பினர்களாக இடம் பெறுவதற்கு தகுதியான நபர்கள் தங்களது விண்ணப்பங்களை வருகிற 23–ந் தேதிக்குள் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கமிட்டியில் இடம் பெறும் பொதுமக்களின் பிரதிநிதிக்கு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க 1 நாள் கூட்டத்துக்கு ரூ.500–ம், 2–ம் வகுப்பு குளிர்சாதன வசதி ரெயில் பெட்டியில் சென்று வருவதற்கான டிக்கெட் செலவும் வழங்கப்படும் என்று ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த கமிட்டி உறுப்பினர்கள் அவ்வப் போது கூட்டங்களை நடத்தி எதிர் கால மின்தேவை, நடைமுறை திட்டங்கள், மின் கட்டண முறைகள், வரவு – செலவு குறித்த அறிக்கைகள், மின் கொள்முதல், விநியோகம், புதிய திட்டங்கள் ஏற்படுத்துதல் தொடர்பாக கலந்து பேசி முடிவு எடுப்பார்கள்.
ரெயில்வே துறை போல் மின்வாரியத்திலும் ஆலோசனை வழங்க கலந்தாய்வு கமிட்டி அமைக்கப்படுவது வரவேற்கதக்கது என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment