எஸ்எம்எஸ் மூலம் மின்கட்டண விவரங்கள் உள்ளிட்ட சேவைகளைப் பெற மின்நுகர்வோர் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை ஒரு கோடி பேர் இதற்காக தங்களது செல்போன் எண்களை மின்வாரியத்துக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த வசதியை ஏற்படுத்தித் தர மின்வாரியம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மின் கட்டணம் செலுத்தும் தேதி, தமிழகம் முழுவதும் ஒரே சீராக இருந்தது. ஆனால், இப்போது அது ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் மாறுபடுகிறது.
நுகர்வோரின் வீட்டுக்கு மின் ஊழியர்கள் சென்று மின்மீட்டரை பார்த்து கட்டணத்தை கணக்கிட்ட தேதியில் இருந்து குறிப்பிட்ட சில தினங்களுக்குள் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்து வருகிறது. அதை சிலர் மறந்துவிடுவதால் மின்இணைப்பு துண்டிப்பு, அபராதம் என்று பிரச்சினை நீள்கிறது.

சமீபத்தில் காமெடி நடிகர் சந்தானம், மின் கட்டணத்தை செலுத்தாததால் அவரது அலுவலகத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இது போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க வும், ஆன்லைனில் மின் கட்டணத்தை செலுத்த வசதியாகவும் மின்நுகர் வோரின் செல்போன்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் மின்கட்டண பாக்கி மற்றும் மின்வெட்டு நேரம் போன்ற தகவல்களை அனுப்ப மின்வாரியம் திட்டமிட்டிருந்தது. அது பற்றிய தெளி வான தகவல் இல்லாததால் மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை.
மக்களிடையே திடீர் ஆர்வம்
இதைத் தொடர்ந்து, மின்கட்டணம் செலுத்த வருவோர் பார்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அலுவலகங்களில் ஒரு பதிவேட்டினை மின்வாரியத்தினர் வைத்தனர். அதில் நுகர்வோர் எண், பெயர் மற்றும் செல்போன் எண்களை வாடிக்கையாளர்கள் எழுதி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த திட்டத்துக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. குறுகிய காலத்திலேயே பல லட்சம் பேர் தங்களது விவரங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த சேவையைப் பெறுவதற்காக, சென்னை தெற்கு மின் வட்டத்தில் உள்ள 13.73 லட்சம் நுகர்வோரில் 7.57 லட்சம் பேரும், செங்கல்பட்டு வட்டத்தில் இருக்கும் 6.19 லட்சம் பேரில் இதுவரை 5.56 லட்சம் நுகர்வோரும் மற்றும் காஞ்சி மின் வட்டத்தில் இருக்கும் 4 லட்சம் நுகர்வோரில் 3 லட்சம் பேரும் இதுவரை தங்களது செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்துள்ளனர்.
இதுபோல், சென்னை மத்திய வட்டம், சென்னை வடக்கு மற்றும் திருவள்ளூர் வட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள 16.22 லட்சம் நுகர்வோர் தங்கள் விவரங்களை பதிவு செய்துள்ளனர். இது மொத்த நுகர்வோரில் 85 சதவீதமாகும்.
தமிழகத்தில் 1 கோடி
இது குறித்து மின்வாரியத்தின் அதிகாரிகள், ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:
இந்த சேவையை நுகர்வோருக்குத் தருவதற்காக பிரத்தியேக சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து வாடிக்கையாளர்களின் செல்போன் எண்களைக் கொண்ட தகவல் தொகுப்பு வேகமாக உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 2.3 கோடி மின்நுகர்வோர் உள்ளனர்.
அவர்களில் ஏப்ரல் இறுதி வரை 1 கோடி பேர் தங்களது செல் போன் எண்கள் மற்றும் இதர விவரங்களை பதிவேடுகளில் குறிப்பிட்டுள்ளனர். இந்த 10 நாட்களில் மேலும் பல லட்சம் பேர் பதிவு செய்துள்ளார்கள்.
பிரத்தியேக சாப்ட்வேர்
வாடிக்கையாளரின் மின்கட்டண விவரங்களை தங்களிடமுள்ள கையடக்க கணக்கிடும் கருவியில் இருந்து கம்ப்யூட்டரில் கணக்கீட்டாளர்கள் பதிவு செய்ததும், மின்வாரியத்தின் சர்வரில் அவை தானாகவே பதிவாகிவிடும். அடுத்த சில நிமிடங்களில் குறிப்பிட்ட நுகர்வோரின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் கட்டணம் பற்றிய தகவல் சென்றடைந்துவிடும்.
தேர்தல் வாக்குஎண்ணிக்கை முடிந்தபிறகு, இந்த மின்கட்டண எஸ்எம்எஸ் சேவை தொடங்கப்படும் தேதி அறிவிக்கப்படும். எனினும் தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் ஒரேநேரத்தில்தான் இந்த திட்டம் அமலாகும். இதன்மூலம் மின்நுகர்வோர் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். மின்துறையின் வருவாயும் பெருகும்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.