மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவரை தேர்வு செய்ய அரசு முடிவு

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் காலியாகவுள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவியைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்களை எரிசக்தி துறை கோரியுள்ளது.
அதன்படி, தகுதியுள்ளவர்கள் வரும் 31 ஆம் தேதிக்குள் தங்களது தன்விவரப் பட்டியலை (பயோ-டேட்டா) எரிசக்தி துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்தத் துறையின் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் மின்சாரக் கட்டணம், மின் பயனீட்டாளர்களுக்கு எழும் பிரச்னைகள் என பல்வேறு விஷயங்களை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கவனித்து வருகிறது. இந்த ஆணையம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டில் ஆணையத்தின் தலைவராக எஸ்.கபிலன் செயல்பட்டு வந்தார். அதன்பிறகு, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக் குழுவை தமிழக அரசு அமைத்தது. பின்னர், இந்தக் குழு மாற்றியமைக்கப்பட்டது.

இந்த நிலையில், புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை எரிசக்தி துறையின் செயலாளர் ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ளார். பொறியியல், நிதி, வணிகம், பொருளாதாரம், சட்டம் அல்லது மேலாண்மை போன்ற விஷயங்களை நன்கு கையாளத் தெரிந்த நபர்களாகவும், மின்சார வாரியத்தின் 2003-ஆம் ஆண்டு சட்ட விதிகளுக்கு உள்பட்டும் ஆணையத்தின் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
மே 31 கடைசி: தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மே 31 ஆம் தேதிக்குள் தங்களது பயோ டேட்டாவை - செயலாளர், எரிசக்தி துறை, தலைமைச் செயலகம், சென்னை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் உறுப்பினர்களாக எஸ்.நாகல்சாமி, ஜி.ராஜகோபால் ஆகியோர் இப்போது செயல்பட்டு வருகிறார்கள். 65 வயது அல்லது ஐந்து ஆண்டு பதவி நிறைவு என இவற்றில் எது முதலில் வருகிறதோ அப்போது அவர்கள் ஆணையத்தின் பொறுப்பில் இருந்து ஓய்வு பெறுவார்கள். அதன்படி, கடந்த 2010-ஆம் ஆண்டு ஆணையத்தின் உறுப்பினராக நாகல்சாமியும், கடந்த ஜனவரி 9 ஆம் தேதியன்று ஜி.ராஜகோபாலும் பொறுப்பேற்றனர்.

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click