புதுச்சேரியில் மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. மின்கட்டண உயர்வு கடந்த ஏப்ரல் 1–ந் தேதி முதல் முன்தேதியிட்டு அமலாகிறது.
மின்கட்டணம் உயர்வு
புதுவையில் மின்சார கட்டணம் உயர்த்துவது தொடர்பாக இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டது. இந்த நிலையில் மின்சார கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு முன் தேதியிட்டு, அதாவது கடந்த ஏப்ரல் மாதம் 1–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுவரை வீட்டு உபயோக மின்சாரத்திற்கு 100 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.1 வசூலிக்கப்பட்டது. இப்போது ரூ.1.05 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
100 யூனிட் முதல் 200 யூனிட் வரை இதற்கு முன்பு யூனிட் ஒன்றுக்கு ரூ.1.50 வசூலிக்கப்பட்டது. அந்த கட்டணம் தற்போது ரூ.1.60 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு 200 யூனிட் முதல் 300 யூனிட் வரை ரூ.2.80 வசூலிக்கப்பட்டது. தற்போது இந்த கட்டணம் ரூ.3.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் 300 யூனிட்டுக்கு மேல் ரூ.3.50 வசூலிக்கப்பட்டது. இந்த கட்டணம் தற்போது ரூ.3.85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வர்த்தகம், தொழிற்சாலை
இதேபோல் வர்த்தக ரீதியிலான மின்சார கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு 100 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.3.50 வசூலிக்கப்பட்ட கட்டணம் இப்போது ரூ.3.85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 100 முதல் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.4 என வசூலிக்கப்பட்ட கட்டணம் தற்போது ரூ.4.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 200 யூனிட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு ரூ.5 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதவிர உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் தொழிற்சாலைக்கான மின் கட்டணம் 8 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மின்கட்டணம் உயர்வு குறித்த அனைத்து விவரங்களும் புதுவை அரசின் மின்துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment