சென்னை:"மின் வாரியத்தில், உதவிப் பொறியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு, மாற்றுத் திறனாளியை அழைத்து, தேர்ந்தெடுக்க வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.மாற்றுத் திறனாளியான கணேசன் என்பவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு:பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். உதவிப் பொறியாளர்களுக்கான, 600 பணியிடங்களுக்கு தேர்வு செய்வதற்காக, தமிழக மின் வாரியம், நடவடிக்கை எடுத்தது. இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கான, 3 சதவீத ஒதுக்கீடு பற்றி, அறிவிப்பில் கூறப்படவில்லை.
முன்னுரிமை பிரிவின் கீழ், என் பெயரை அனுப்பும்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு உத்தரவிட வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு, என்னை அழைக்கும்படி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சங்கத்தின், மாநிலச் செயலர், நம்புராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "உதவிப் பொறியாளர்கள் தேர்வு தொடர்பான அறிவிப்பை, ரத்து செய்ய வேண்டும். சட்டத்தில் கூறியுள்ளபடி, 3 சதவீத ஒதுக்கீட்டை அமல்படுத்தி, புதிய அறிவிப்பாணை வெளியிட, உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது.மனுவை, நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் எம்.கிறிஸ்டோபர் ஆஜரானார்.
மனுவை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:மின் வாரியம், கடந்த ஆண்டு நவம்பரில், 3 சதவீத ஒதுக்கீடு வழங்கி, நடவடிக்கை எடுத்துள்ளதால், சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனு மீது, உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை. கணேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட், உதவிப் பொறியாளர் பணியிடம் ஒன்றை, காலியாக வைத்திருக்க, இடைக்கால உத்தரவிட்டிருந்தது.எனவே, உதவிப் பொறியாளர் பணிக்கான, நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும்படி, கணேசனுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். அவருக்கு தகுதியிருந்தால், ஒதுக்கப்பட்ட காலி இடத்தில், அவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டு உள்ளார்.
No comments:
Post a Comment