அண்டை மாநிலங்களில் இருந்து, 1,000 மெகாவாட் மின்சாரத்தை வாங்க வாரியம் முடிவு தினமலர் செய்தி

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=618628

சென்னை: தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையைப் போக்க, அண்டை மாநிலங்களில் இருந்து, 1,000 மெகாவாட் மின்சாரத்தை வாங்க, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகம் தற்போது, மின் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. புதிய மின் திட்டங்கள் செயல்பாட்டிற்கு வர அதிக காலம் எடுத்துக் கொள்வதால், சென்னை தவிர, மாநிலத்தின் மற்ற பகுதிகளில் மின்வெட்டு, 18 மணி நேரம் வரை அதிகரித்தது.அன்றாடம் உற்பத்தியாகும் மின்சாரத்தை, அனைத்து பகுதிகளுக்கும் தேவை கருதி பிரித்து வழங்கப்படுவதாலும், காற்றாலை மின்சாரம் சற்றே கை கொடுப்பதாலும், கடந்த சில தினங்களாக, மின் தடை நேரம் சில பகுதிகளில் குறைந்துள்ளது.இதற்கிடையில், வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குவதற்கு அனுமதி கோரி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம், கடந்தாண்டு மனு அளித்திருந்தது. இம்மனுவில், குறைந்த கால ஒப்பந்த அடிப்படையில், வெளி மாநில மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து, 1,000 மெகாவாட் மின்சாரத்தை, இந்தாண்டு ஜூன் முதல், அடுத்தாண்டு மே மாதம் வரை வாங்கிக் கொள்ள அனுமதி கேட்கப்பட்டிருந்தது.


இம்மனுவை, கடந்த மாதம், 31ம் தேதி, மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் உறுப்பினர்கள், பரிசீலனைக்கு எடுத்து ஆய்வு செய்தனர். இறுதியில், 1,000 மெகாவாட் மின்சாரத்தை வெளி மாநிலங்களில் இருந்து பெற்றுக் கொள்ள அனுமதி அளித்துள்ளனர்.யூனிட் ஒன்றிற்கு , ஐந்து ரூபாய் வரை அளிக்கலாம் என்றும் உத்தரவில் கூறியுள்ளது. மேலும், நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள மின் தொடரமைப்புகளுடன், தென் மாநில தொடரமைப்பு இணைக்கப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்கள் இணைந்த தென் மண்டல கட்டமைப்பில், பிரச்னை ஏதும் இல்லை. எனவே, இந்த நான்கு மாநிலங்களுக்கிடையில், மின்சாரத்தை கொண்டு செல்ல முடியும்.தற்போது, தென் மாநிலங்களில் அனல் மின் சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொண்டு வருவதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இதில், பிரச்னை ஏதும் இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.
மின்சாரம் வாங்குவது தவிர, நிதி நிலை மறுசீரமைப்பு செய்வதற்கான அனுமதியையும், ஒழுங்கு முறை ஆணையத்திடம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கோரியிருந்தது. இதற்கான அனுமதியையும் ஒழுங்கு முறை ஆணையம் வழங்கியுள்ளது.

குறைதீர் மையங்களை அணுகுங்கள்!

மின்சாரம் தொடர்பான குறைகள் ஏதுமிருப்பின், குறைதீர் மையங்களை அணுகுமாறு, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, ஆணையசெயலர், குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதிய மின் இணைப்பு பெறுதல், இணைப்பு பெறுவதில் காலதாமதம், குறைபாடான மீட்டர்களை மாற்றுதல், மின் நுகர்வு குறைபாடுகளை களையாதிருத்தல் போன்ற, மின் நுகர்வோரின் பிரச்னைகளைத் தீர்க்க, சம்பந்தபட்ட மின் வட்டத்தின் மேற்பார்வை பொறியாளரைக் கொண்ட, மின் நுகர்வோர் குறைதீர் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, மின் நுகர்வோர், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மற்றும் பிற அமைப்புகளுக்கு, குறைகள் தொடர்பான கடிதம் எழுதுவதற்கு பதிலாக, மின் நுகர்வோர் குறைதீர் மையங்களை தொடர்பு கொண்டு, அவற்றை தீர்த்துக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments: