புது தெர்மல் மின் உற்பத்தி தாமதம் மின் கழகத்துக்கு ரூ.108 கோடி இழப்பு (தினமலர் செய்தி)


மேட்டூர் புதுதெர்மல் மின்உற்பத்தி தாமதமாவதால், மின்கழகத்துக்கு மாதம், 108 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என, மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில நிர்வாகிகள் தெரிவித்தனர்.மேட்டூரில், 3,550 கோடி ரூபாய் செலவில் புதிதாக, 600 மெகா வாட் , அனல் மின் உற்பத்தி நிலையம் (தெர்மல்) அமைக்கும் பணி, 2008ம் ஆண்டு ஜூன், 25ல் துவங்கியது. கட்டுமான பணி முடிந்து, 2011 செப்டம்பரில் புதுதெர்மலை கான்ராக்ட் நிறுவனம், மின் கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.கட்டுமான பணி தாமதமாவதால், 2012 மார்ச்இறுதியில் தான், சோதனை ஓட்டம் துவங்கியது. அக்., 11ம் தேதி சோதனை ஓட்டத்தின் போது, அதிகபட்சமாக, 608 மெகா வாட், மின் உற்பத்தி செய்யப்பட்டது. அதன் பின், தொழில் நுட்ப கோளாறு காரணமாக, மின் உற்பத்தி தடைப்பட்டது. கோளாறு சரி செய்வதற்காக, கடந்த ஒரு மாதமாக, மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில பொது செயலர் சுப்ரமணியன், தலைவர் விஜயன், மேட்டூர் மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நடந்த நுழைவாயில் கூட்டம், ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.அவர்கள் கூறியதாவது:

மேட்டூர் புதுதெர்மலில் மின் உற்பத்தி சோதனை முடிந்து, 2011 செப்டம்பரில், மின்கழகத்திடம் ஒப்படைத்திருக்க வேண்டும். தாமதமாகும் பட்சத்தில், மின் கழகத்துக்கு மாதம் தோறும், 108 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். அந்த இழப்பீடு தொகையை, பி.ஜி.ஆர்., நிறுவனம் மின்கழகத்துக்கு செலுத்த வேண்டும் என, ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

பணிகளை முடித்த பின்பே, கான்ட்ராக்ட் நிறுவனத்துக்கு, அரசு ஒப்பந்த தொகையை முழுமையாக வழங்கும். ஆனால், மேட்டூர் புதுதெர்மலை பொறுத்தவரை, பணி நடக்கும் போதே, 90 சதவீத நிதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், மின்கழகம் கான்ட்ராக்ட் நிறுவனத்தை, கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது. புதுதெர்மல் சீனா தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளது. இதில், ஏதேனும் ஒரு உதிரிபாகங்கள் பழுதடைந்தாலும், சீனாவில் இருந்துதான், இறக்குமதி செய்தாக வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments: