வேலூர், : மின்வினியோக முறையில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், அனைத்து நடைமுறைகளையும் கணினிமயமாக்கவும் ஆர்ஏபிடிஆர்பி திட்டத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட பணியில் இறங்கியுள்ளது.
தமிழகத்தின் மொத்த மின்உற்பத்தி 17540 மெகாவாட். நுகர்வோர் எண்ணிக்கை 223.44 லட்சம். 5.56 லட்சம் கி.மீ தூரத்துக்கான மின்பாதையும், 2.04 லட்சம் மின்மாற்றிகளும் உள்ளன. 63,956 நகர்ப்புற, கிராமப்புறங்கள் மின்வசதியை பெற்றுள்ளன.
இந்நிலையில், 2012ம் ஆண்டு 100 சதவீத மின்இணைப்பை உறுதி செய்ய ஆர்ஜிஜிவிபி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும், மின்வினியோகத்தில் உள்ள குறைகளை களைய 11 கே.வி. மின்மாற்றிகளும் ஏற்படுத்தப்பட்டன. அனைத்து மின்மாற்றிகளிலும் டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தப்பட்டன.
இந்நிலையில், திருத்தி அமைக்கப்பட்ட விரைவுபடுத்தப்பட்ட மின்மேம்பாடு மற்றும் சீரமைப்புத்திட்டம் என்ற ஆர்ஏபிடிஆர்பி திட்டம் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை நடப்பாண்டில் நடைமுறைப்படுத்த மத்திய மின்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இதன் முக்கிய நோக்கம் தொழில்நுட்ப மற்றும் வணிகரீதியிலான மின்இழப்பை குறைத்தலும், நம்பகமான தானியங்கி நடைமுறைகள் மூலம் துல்லியமான புள்ளி விவரங்களை தொடர்ச்சியாக சேகரித்தல் மற்றும் தகவல் தொழில்நுட்ப உதவியுடன் மின் கணக்கீடு செய்தல் ஆகியவை ஆகும். இத்திட்டம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள நகரங்களில் பகுதி அ பகுதி ஆ என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. பகுதி அ திட்டத்தில் அடிப்படை புள்ளி விவரங்களை சேகரித்தல், தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் மின்பயன்பாட்டை கணக்கிடுதல், தணிக்கை செய்தல் மற்றும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையங்கள் அமைத்தல் ஆகியவை அடங்கும். தமிழகத்தில் 110 நகரங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.417 கோடியை மத்திய மின்துறை அமைச்சகம் ஒதுக்கியுள்ளது.
மக்கள் தொகையில் 4 லட்சத்துக்கு மேலும், 350 மில்லியன் யூனிட் மின்உபயோகமும் கொண்ட சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய இடங்களில் மேல் கட்டுப்பாடு மற்றும் விவரங்கள் சேகரித்தல், பகிர்மான மேலாண்மைத் திட்டம் நிறுவ ரூ.182.17 கோடியை அனுமதித்துள்ளது.
அதேபோல், பகுதி ஆ திட்டத்தில் உயர்மின் அழுத்த வினியோகம் உள்ளிட்ட நடைமுறைகளின் மூலம் ஏற்படும் மின்இழப்புகளை குறைத்து மின்வினியோக கட்டமைப்பை மேம்படுத்துவது. இத்திட்டம் 87 நகரங்களில் 5 கட்டங்களாக ரூ.3,279.56 கோடியில் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளில் மின்வாரியம் தற்போது ஈடுபட்டுள்ளது. முதலில் அனைத்து நுகர்வோரின் செல்பேசி எண்களும், நுகர்வோர் பயனீட்டு எண்ணும், அவர்களின் இணைப்பு விவரமும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
ஆர்ஏபிடிஆர்பி திட்டம் முழு அளவில் நடைமுறைக்கு வரும்போது தமிழகத்தில் ஏற்படும் தேவையற்ற மின்இழப்பு 19 சதவீதத்தை 15 சதவீதமாக குறைக்க முடியும். அதோடு, மின்திருட்டு போன்ற குற்றங்களையும் தடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment