அரசின் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறுவதற்கான பொது சேவை மையங்களை உருவாக்குவதற்கான தீவிர முயற்சிகளை
தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
அமைச்சர் அறிவிப்பு
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சட்டசபையில் கடந்த ஏப்ரலில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழகத்தில் செல்போனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே அரசு சேவை தகவல்களை செல்போன் வழியாக வழங்குவதற்கு அவசியம் ஏற்பட்டது.
தகவல்களை பொதுமக்கள் அனுப்பவும், அவர்களிடம் இருந்து தகவல் பெறுவதற்கும், இருவழி குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) தொடர்பு வசதியை ஏற்படுத்துவதால், பெரும்பான்மையான மக்களின் வீடுகளுக்கே நேரடியாக சேவையை கொண்டு செல்ல இயலும்.
அதுமட்டுமல்லாமல், பொதுச்சேவை மையங்கள் மூலம் சேவையைப் பெறுவதற்காக மக்களின் இருப்பிடத்துக்கு அருகிலேயே அந்த மையங்களை அமைப்பதற்கு அரசு முயற்சி எடுத்து வருகிறது. அந்த வகையில் கிராமப்புறங்களில் இரண்டாயிரத்து 280 மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று கூறியிருந்தார்.
டெண்டர் பணிகள்
இந்த இரண்டு திட்டங்களையும் விரைவாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அந்த திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு அதிகாரிகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த திட்டங்களை நிறைவேற்றும் நிறுவனங்களை முடிவு செய்வதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. டெண்டரை முடிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்கள்
ரேஷன் அட்டைகள், பல்வேறு வகை சான்றிதழ்கள், கல்வி நிதியுதவி கேட்டு அரசிடம் மக்கள் விண்ணப்பிக்கின்றனர். ஆனால் அந்த விண்ணப்பத்தின் நிலை என்ன? அது பரிசீலிக்கப்படுகிறதா? கிடைக்குமா? கிடைக்காதா? என்ற பல கேள்விகளுக்கு விடை தெரிவதில்லை.
ஆனால் எஸ்.எம்.எஸ். வசதி ஏற்படுத்தப்பட்டுவிட்டால், விண்ணப்பதாரரின் விண்ணப்பங்கள் எந்த நிலையில் இருக்கின்றன? பரிசீலனையில் உள்ளதா? இல்லையா? என்பதுபோன்ற தகவல்களை, அந்தந்த விண்ணப்பதாரரின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் வந்து சேரும்.
ஒரு நிலையில் இருந்து மற்றொரு கட்டத்துக்கு விண்ணப்பம் கொண்டு செல்லப்படும்போதும்,விண்ணப்பத்தின் நிலை குறித்த தகவல்கள் எஸ்.எம்.எஸ். மூலம் விண்ணப்பதாரருக்கு வந்துவிடும்.
5 மாவட்டங்களில் மட்டும்
தற்போது அரசு சேவைகளை அளிக்கும், பொது சேவை மையங்கள், ஐந்து மாவட்டங்களில் செயல்படுகின்றன. கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள சுமார் 1,500 சேவை மையங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தற்போது அரசின் 10 சேவைகள் மட்டுமே இந்த மையங்கள் மூலம் மக்களுக்கு அளிக்கப்படுகின்றன.
முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் இந்த சேவை மையங்கள் உருவாக்கப்பட உள்ளன. மூன்று கிராமங்களுக்கு ஒரு மையம் என்ற வகையில் இரண்டாயிரத்து 280 மையங்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று கிராமங்களுக்கு ஒரு மையம் என்ற அளவில் இவை உருவாக்கப்படும். இந்த சேவை மையங்களில் இருந்து குறைந்தபட்சம் 100 சேவைகளை மக்கள் பெற முடியும்.
சில சேவைகள்
அதன்படி, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள், குடிநீர், குடியிருப்பு போன்றவற்றுக்கான வரிகள் போன்றவற்றை இந்த மையங்களில் செலுத்தி ரசீது பெறலாம்.
மேலும், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பதிவு சான்றிதழ்கள், ரேஷன் அட்டை போன்ற அரசிடம் இருந்து பெறவேண்டிய அனைத்து சான்றுகளுக்காக இந்த மையங்களிலேயே விண்ணப்பிக்க முடியும். இப்படி அனைத்து அரசு துறைகளையும் உள்ளடக்கிய 100 சேவைகளை பெற்று மக்கள் பயனடைய முடியும்.
அலைச்சல், நேரம் மீதமாகும்
அரசு தொடர்புடைய வேலைகளுக்காக சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களை மக்கள் தேடி அலைந்து நேரத்தை வீணாக்க வேண்டாம். அவரவர் வீட்டுக்கு அருகே அமைக்கப்படும் இந்த மையங்களிலேயே அரசு தொடர்புடைய அனைத்து வகை பணிகளையும் முடித்துக்கொள்ளலாம். ஒரு மாவட்டத்துக்கு 150 முதல் 200 மையங்கள் என்ற விகிதத்தில் அமைக்கப்படும்.
இந்த சேவை மையங்கள் குறித்து கேட்டபோது, சில மாதங்களுக்குள் இவற்றை அமைப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. முதலில் கிராமப்புறங்களில் அமைத்த பிறகு, இந்த சேவை மையங்களை நகர்ப்புறங்களுக்கும் கொண்டு வருவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என்று தகவல் தொழில்நுட்பத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment