தமிழக அரசின் சூரியசக்தி கொள்கையை நிறைவேற்றுவதற்கு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.
அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், வீடுகளில் மேற்கூரையில் சூரிய மின்சக்தி சாதனங்களை பொருத்துவதற்கு, அரசின் சார்பில் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தது.
இந்நிலையில், சூரிய மின்சக்தி கொள்கையை அமல்படுத்த, வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்து, அதற்கு முறையான அனுமதி பெற வேண்டுமென்று கூறி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தானாக முன்வந்து ’சூ மோட்டோ’ விசாரணையைத் துவங்கியது. இது தொடர்பாக, பொதுமக்களின் கருத்துகள் அறியப்பட்டன.இதனடிப்படையில், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
சூரிய மின்சக்தியை மின் தொகுப்புடன் இணைக்கும் தாழ்வழுத்த மற்றும் உயரழுத்த மின் நுகர்வோர்கள், இரண்டு வகையான மீட்டர்கள் பொருத்த வேண்டும். ஒரு மீட்டரில் சூரிய சக்தி உற்பத்தியைக் கணக்கிட வேண்டும். மற்றொன்றில் சம்பந்தப்பட்ட நுகர்வோர், மின் தொகுப்புக்கு வழங்கிய மற்றும் தொகுப்பில் எடுத்த மின் அளவை கணக்கிட வேண்டும்.
இந்த மீட்டர்களை, மத்திய மின்சார ஆணைய விதிமுறைக்குட் பட்டு, எந்த நிறுவனத்தில் வாங்க வேண்டுமென்ற பட்டியலை, மின்வாரியம் அறிவிக்க வேண்டும்.
மீட்டர்கள் மற்றும் மின் தொகுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்துதல், சூரிய மின்சக்தி உபகரணங்களில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்வது போன்றவற்றுக்கான கட்டணத்தை, சம்பந்தப்பட்ட நுகர்வோரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.சம்பந்தப்பட்ட உபயோகிப்பாளரிடமிருந்து மின் தொகுப்புக்கு அனுப்பும் மின்சார அளவில், 90 சதவீதம் கணக்கில் எடுக்கப்படும்; 10 சதவீதம் கட்டமைப்பு செயல்பாடு இழப்பாக கருதப்படும்.