அலங்கார, விளம்பர பலகை மின் விளக்குகளை போட வேண்டாம் என்று மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது

சென்னை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் 10 மணி முதல் 14 மணி நேர மின்வெட்டு அறிவிக்கப்படாத நிலையில் நீடிக்கிறது. அதிக நேரம் மின்வெட்டு அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தை மின்வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது. மின் வெட்டை சமாளிக்க, மாலை 6 மணிக்கு மேல் அலங்கார, விளம்பர பலகை மின் விளக்குகளை போட வேண்டாம் என்று மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு மின்தடை மீண்டும் கடந்த 10 நாளாக நீடிக்கிறது.
இதனால் மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் பெண்கள் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. மாணவர்கள் படிக்க முடியவில்லை. பகலில் இப்படி அவதி என்றால், இரவில் மின் தடையால் கொசுக்கடிக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. இருளை பயன்படுத்தி பல இடங்களில் திருட்டு சம்பவம் நடக்கிறது.
கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் தொழிற்சாலைகளை இயக்க முடியாததால் உற்பத்தி முடங்கிப் போயுள்ளது. பட்டறைகளை மூடி விட்டு, கஞ்சித்தொட்டி திறக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று அந்த தொழிலில் உள்ளவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். இந்நிலை யில், மின் வெட்டு தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தற்போது மின் உற்பத்திக்கும் மின் தேவைக்கும் இடையே 4000 மெகா வாட் வரை பற்றாக்குறை இருப்பதால் தமிழகத்தின் பல பகுதிகளில் தேவைக்கேற்றவாறு, அறிவிக்கப்பட்ட அளவிற்கும் அதிகமாக மின்வெட்டு அமல்படுத்தப்பட வேண்டியுள்ளது. இந்நிலையை ஓரளவு சரி செய்வதற்கு அனைத்து தரப்பு மின்நுகர்வோர்களின் உதவியும் தேவைப்படுகிறது. இதன் பகுதியாக அனைத்து வகையான மின் நுகர்வோர்கள் மாலை 6 மணி முதல் தங்களது மின் இணைப்புகளில் அனைத்து வகையான வண்ண மற்றும் அலங்கார விளக்குகள், விளம்பரப் பலகை விளக்குகள் ஆகியவற்றிற்கு மின்சார உபயோகம் செய்வதை மின்விநியோகம் சீராகும் வரை தற்காலிகமாக தவிர்க்க வேண்டும்.
இதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தைக் கொண்டு தமிழகத்தின் பல பகுதிகளுக்கு அடிப்படை தேவைக்கான மின்சாரத்தை விநியோகம் செய்ய ஏதுவாக இருக்கும். இதற்கு நுகர்வோர் தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னையில் மட்டும்தான் ஒரு மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது. மற்ற மாவட்டங்களில் இந்த அளவு குறைந்தபட்ச மின்வெட்டை தொடர்ந்து அமல்படுத்த இயலாத நிலை உள்ளது. ஒரு பக்கம் காற்றாலை மின்சாரம் கைகொடுக்கவில்லை.
இன்னொரு பக்கம் மின் தேவைக்கும், உற்பத்திக்கும் இடைவெளி அதிகரித்தபடி உள்ளது. இதனால்தான் வேறு வழியில்லாமல் மின் வெட்டை பல மணி நேரம் அதிகரிக்க வேண்டி உள்ளது என்றார். மின் சிக்கனம் பற்றி அவர் கூறுகையில், சென்னையில் சாதாரண கடைகளில் அலங்கார விளக்குகள் போடப்படுகின்றன. இப்படிப்பட்ட பற்றாக்குறை சமயங்களில் அவர்கள் ஒத்துழைக்க வேண்டும். ஒவ்வொரு அலங்கார, வண்ண விளக்கும் குறைந்தபட்சம் 240 வாட் மின்சக்திக்கு அதிகமானது. இதனால் மின்சாரம் அதிக அளவில் செலவாகும். சென்னை கடைகள், நிறுவனங்கள் கைகொடுத்தால், மற்ற மாவட்டங்களில் மின்பற்றாக்குறையை வரும் நாட்களில் சமாளிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

No comments: