தினகரன் செய்தி சென்னையை தவிர 31 மாவட் டங்களில் மின்வெட்டு இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது.


தமிழகத்தில்  சென்னையை தவிர 31 மாவட் டங்களில் மின்வெட்டு இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது.  தொழில்சாலைகளுக்கு மின் விடுமுறை அளிக்கும் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் நிலை உருவாகி உள்ளது. மாநிலத்தில் நாள்தோறும் சுமார் 13 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில் காற்றாலை மின் உற்பத்தியை தவிர்த்து சராசரியாக பாதி அளவே மின்சாரம் உற்பத்தியாகிறது. 3 மாதங்களாக காற்றாலைகள் மூலம் 2,500 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வந்தது.


தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் 12 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிரடியாக அமல் படுத்தப்பட்டது. நேற்று அதிகாலை 6 மணி நிலவரப்படி நெல்லை மண்டலத்தில் 300 மெகாவாட் மற்றும் ஈரோடு மண்டலத்தில் 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. இதனால் 2 மணி நேரம் மின் விநியோகமும் அடுத்த 2 மணி நேரம் மின் தடையும் என மாறி மாறி அளித்து சமாளிக்க முடிவு செய்தனர்.

ஆனால் அதற்கு பிறகு காற்றாலைகள் சுழல்வது அடியோடு நின்றது. நேற்று பகல் முழுவதும் பெரும்பாலான காற்றாலைகள் முடங்கியதால் காற்றாலை மின் உற்பத்தி பூஜ்யம் நிலைக்கு சென் றது. இதனால் செய்வதறியாது திகைத்த மின் வாரியத்தினர் அறிவிக்கப்படாத மின்தடையை முழுமையாக அமல்படுத்தினர். காலை முதல் இரவு வரை மின்சார சப்ளை இல்லாததால் தொழில் கூடங்களில் மட்டும் அல்லாமல் வீடுகளிலும் எந்த வித பணிகளையும் செய்ய முடியாமல் இயல்பு வாழ்க்கையை முடங்கியது.

இரவு முழுவதும் 1 மணி நேரம் மின் தடையும், 1 மணி நேரம் மின் சப்ளையும் நடைபெற்றது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் தூங்கவிடாமல் செய்த மின் தடை பகலிலும் கொளுத்தும் வெயிலில் புழுக்கத்தில் தவிக்க வைத்தது. குமரி மாவட்டத்தில் இரவில் தூக்கமில்லை: குமரி மாவட்டத்தில் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது.

காலை 5 மணிக்கு தொடங்கி, 2, 3 மணி நேரத்துக்கு ஒருமுறை குறைந்தபட்சம் 3 மணி  நேரம் முதல் 5 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. காலை 9 மணிக்கு சென்றால், 5 மணி நேரம் கழித்து பகல் 2 மணிக்கு தான் மின்சாரம் வருகிறது. பின்னர் மாலை 4 மணிக்கு கட் செய்யப்பட்டு, இரவு 7 மணிக்கு வருகிறது. மாவட்டம் முழுவதும் சுழற்சி முறையில் மின்வாரியம் இதை அமல்படுத்தி வருகிறது. இது தவிர 10 நாட்களுக்கு ஒரு முறை பராமரிப்பு என கூறி காலை முதல் இரவு வரை மின்சாரத்தை நிறுத்தி விடுகிறார்கள். இந்த மின் வெட்டு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி இருக்கிறது.

மதுரை உள்பட 6 மாவட்டங்கள், தொழிற்சாலைகள் கடும் பாதிப்பு: மதுரை, தேனி மாவட்டங்களில் 3 நாளாக 12 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நிலவுகிறது. இதனால் தொழிற்சாலைகளுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டன. விருதுநகர் மாவட்டத்தில் 13 மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது. இதனால் எண்ணெய், பருப்பு, பஞ்சாலை மில்கள், சிவகாசியில் பிரிண்டிங் தொழிலும், அருப்புக்கோட்டை, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதியில் நூற்பாலைகளும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் 14 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு ஏற்படுகிறது. இங்கு 150க்கும் மேற்பட்ட டெக்ஸ்டைல் நிறுவனங்க ளில் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் கடலோரங்களில் உள்ள ஐஸ் தொழிற்சாலைகளில் உற்பத்தி முடங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மின்தடையால் காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தில் இருந்து பம்பிங் செய்ய இயலவில்லை. இதனால் குடிநீர் சப்ளை மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில்...

வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மின்வெட்டு நேரம் 10 மணி நேரமாக அதிகரித்துள்ளது. பகல் நேரங்களில் 3 மணி நேரம் வீதம் 2 முறை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இரவு நேரங்களில் 4 மணி நேரத்தை ஒரு மணி நேரம் வீதம் மின்வெட்டு அமல் படுத்தப்படுகிறது. கோவை: கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த சில வாரங்களில் தொழிற்சாலைகள் மொத்தமாக முடங்கி விடும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மின்வெட்டு நேரம் 7 மணி முதல் 10 மணி நேரமாக அதிகரித்துள்ளன. காலை நேரத்தில் தொடர்ச்சியாக 3 மணி நேரமும், பிற்பகலில் 3 மணி நேரமும் மின்வெட்டு உள்ளது. இரவு நேரத்தில் ஒரு மணி நேரம் என்ற அளவில் இரண்டு அல்லது 3 முறை மின்வெட்டு ஏற்படுகிறது.

கடலூர், விழுப்புரத்தில்...

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் 12 மணி நேர மும்முனை மின்சார வினியோகம் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் முதல் திடீரென மும்முனை மின்சார வினியோகத்தை 3 மணி நேரமாக குறைத்து வழங்க தமிழக அரசு மின்சார வாரியத்துக்கு உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சம்பா சாகுபடி விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நகரம், பேரூராட்சி பகுதிகளில் கிராமங்களில் பகலில் தலா 3 மணி நேரம் என 6 மணி நேரம், இரவில் தலா 1 மணி நேரம் என 6 மணி நேரம் என்று மொத்தம் 12 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் 14 மணி நேரம் மின்வெட்டு அதிகரிக்கப்பட்டுள்ளது. காலையில் 3 மணி நேரமும், பின்னர் மதியம் 3 மணி நேரமும், அதன்பின் மாலையில் 2 மணி நேரமும் என பகலில் மட்டும் 8 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு பின் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என 6 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. இந்த மின்வெட்டால் பல்வேறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில். இரவு நேரங்களில் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை 1 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 8 மணி நேரம் வரை மின்சப்ளை துண்டிக்கப்படுகிறது.

இந்த அளவுக்கு ஏன்?

றீ தமிழகத்தில் நீர் மின் திட்டம், காற்றாலை, அனல் மின் நிலையங்கள் மூலம் மொத்தம் 12,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. றீ தற்போது 4,500 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், தினமும் 10 முதல் 12 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் குந்தா, பைக்காரா, அப்பர் பவானி பகுதிகளில் நீர்மின் திட்டங்கள் மூலமாக 2,223 மெகாவாட்டும்,

திருநெல்வேலி, பல்லடம், பொங்கலூர் பகுதிகளை சேர்ந்த காற்றாலை மூலம் 4 ஆயிரம் மெகாவாட்டும், நெய்வேலி, மேட்டூர், எண்ணூர், வடசென்னை ஆகிய அனல் மின் நிலையகளில் இருந்து சுமார் 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட வேண்டும்.  ஆனால், தற்போதைய வறட்சியால் நீர் மின் நிலையங்கள் மூலம் மொத்தம் உற்பத்தி ஆக வேண்டிய 2223 மெகாவாட்டில் வெறும் 450 மெகாவாட்டும், காற்றாலை மூலம் உற்பத்தி ஆக வேண்டிய 4 ஆயிரம் மெகாவாட்டில் வெறும் 150 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தியாகிறது.

அனல் மின் திட்டங்களை பொருத்தவரை எண்ணூர் அனல் மின் திட்டத்தில் 450 மெகாவாட்டுக்கு பதிலாக 100 மெகாவாட்டும், நெய்வேலியில் 2,085 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி ஆகிறது. நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் கணிசமான அளவு மத்திய மின்தொகுப்புக்கு அனுப்பப்படுகிறது. மேலும் வழுதூர், கோபால்கலப்பால், குற்றாலம் ஆகிய பகுதிகளில் காசிப்பயர் மூலமாக 150 மெகாவாட்டும்,

மத்திய மின் தொகுப்பிலிருந்து 3 ஆயிரம் மெகாவாட் என மொத்தமே 8,635 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தியாகிறது. ஏறத்தாழ 4,500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளதால் தொடர்ந்து மின்விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தினமும் 10 முதல் 12 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. வழக்கமாக மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழையின்போது காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதிகமாக இருக்கும். தற்போது வெறும் 150 மெகாவாட் மட்டுமே காற்றாலை மூலம் உற்பத்தியாகிறது. இதுவே தற்போதைய மின்தட்டுபாட்டுக்கு காரணம். இவ்வாறு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரிசி ஆலைகள், விவசாய பணிகள் முற்றிலும் பாதிப்பு

திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை கடந்த சில நாட்களாக 10 முதல் 12 மணி நேரம் வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக நவீன அரிசி ஆலைகளில் பெருமளவில் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி இழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த ஒரு வாரகாலத்திற்கும் மேலாக 10 மணிநேரம் மின்வெட்டு செய்யப்படுவதால் விவசாயப்பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை முக்கியத் தொழிலான ஜவுளித்தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

No comments: