திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் உள்ள மின்வாரிய அலுவலகங்களுக்கு தேவையான அலுவலர்கள், பணியாளர்கள் என 3,300 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன; 1,200 பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்; 2,100 பணியிடங்கள் காலியாக உள்ளன. 68 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளதால், நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில், திருப்பூர், பல்லடம், அவிநாசி, காங்கயம் கோட்டங்கள் உள்ளன. உயர் மின்னழுத்த இணைப்பு பெற்ற தொழிற்சாலைகள், பனியன், விசைத்தறி, வீட்டு மின் இணைப்புகள் என 5.70 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. மாதம்தோறும் 73 கோடி ரூபாய் மின் கட்டணம் வசூலாகிறது.
மின் பற்றாக்குறையை போலவே, மின் பணியாளர்கள் பற்றாக்குறையும் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. மற்ற பகுதிகளை ஒப்பிடும்போது, திருப்பூரில் தொழில் வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக, அதிகளவு மின் இணைப்புகள், பணிகள் என நெருக்கடியான சூழல் உள்ளது. எனவே, தற்போதுள்ள பிரிவு அலுவலகங்களை பிரித்து, கூடுதல் அலுவலகங்கள் மற்றும் கூடுதல் பணியிடங்கள் ஒதுக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட பணியிடங்களுக்கு கூட ஆளில்லை.
திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் உள்ள மின்வாரிய அலுவலகங்களுக்கு தேவையான அலுவலர்கள், பணியாளர்கள் என 3,300 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன; 1,200 பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்; 2,100 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதில், மிகவும் முக்கிய பணியிடமான, ஒயர்மேன் பணிக்கு ஆட்களே இல்லாத நிலை உள்ளது. 5.70 லட்சம் மின் இணைப்புகளையும் 22 பேர் மட்டுமே கவனித்துக் (!) கொள்கின்றனர். மொத்தமுள்ள 618 பணியிடங்களில் 596 காலியாகவே உள்ளன.
இது நம்ப முடியாததாக இருந்தாலும்,தொடர்ந்த பணி நடப்பதற்கு காரணம், ஒவ்வொரு ஒயர்மேனும், தங்களுக்கு உதவியாக பலரை பணிக்கு அமர்த்தியுள்ளனர். இவ்வாறு, கணக்கில் வராத பணியாளர்களாக பலர் பணியாற்றி வருகின்றனர். மின் இணைப்பு, பியூஸ் கால் ஆகியவற்றை கவனிக்கும் பணியில் ஈடுபடும் கணக்கில் வராத பணியாளர்களுக்கு, நுகர்வோரிடம் இருந்து "கறக்கப்படும்' பணத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை கொடுக்கப்படுகிறது.
இதேபோல், மின் இணைப்புகளில் "ரீடிங்' எடுத்து, வசூலிக்கும் பணியாளர் பணியிடங்கள் 224 உள்ளது. மின் கணக்கீட்டாளர்கள் 114 பேர் மட்டுமே உள்ளனர். கணக்கீட்டை ஆய்வு செய்தல், மின் இணைப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை கவனிக்க வேண்டிய வணிக ஆய்வாளர் பணி ஒதுக்கீடு 117; ஆனால், 30 பேர் மட்டுமே உள்ளனர்.
மின் இணைப்பு, கம்பங்கள் அமைத்தல், டிரான்ஸ்பார்மர், மின் பாதை பராமரிப்பு என அடிப்படை பணிகள் மேற்கொள்ள வேண் டிய ஹெல்ப்பர் பணியிடங்கள் ஒதுக்கீடு 620; 195 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 424 இடங்கள் காலியாக உள்ளன. மஸ்தூர் பணியிடங்கள் 275ல், 130 பேர் பணியில் உள்ளனர்; 145 இடங்கள் காலியாக உள்ளன.
வருவாய் மேற்பார்வையாளர் பணி 100ல், 63 பணியிடங்கள் காலியாக உள்ளன. மின் மீட்டர் பழுது, லேப் உள்ளிட்ட பணிகளுக்கான தொழில் நுட்ப பணியிடங்கள் 37ல், 31 காலியாக உள்ளன. துணை மின் நிலையங்களில் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு என துணை மின் பொறியாளர் (இரண்டாம் நிலை) பணியிடம் உள்ளது. மொத்தமுள்ள 84 பணியிடத்தில், 68 பணியிடங்கள் காலியாகவே உள்ளன.
பிரிவு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும், பொதுமக்களிடம் இருந்து பெறும் விண்ணப்பங்களை பரிசீலித்தல், கடிதங்கள் பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற் கொள்ள, அலுவலக உதவியாளர் நிலையில் உள்ள வணிக உதவியாளர் பணியிடம் ஒதுக்கீடு 131. இப்பிரிவில், ஒருவரே பணியில் உள்ளார்; 130 இடங்கள் காலியாக உள்ளன. இவ்வாறு, திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் 70 வகையான பணியிடங்களில், பெரும்பாலானவை காலியாகவே உள்ளன.
இளம்பொறியாளர், பொறியாளர் என அதிகாரிகள் 90 சதவீதம் உள்ளனர். அடிப்படை பணிகள் மேற்கொள்ள வேண்டிய இடங்களில், மூன்றில் இரண்டு பங்கு பணியிடங்கள் காலியாக உள்ளன. நிர்வாக பணிகளில் மொத்தமுள்ள 870 பணியிடங்களில் 435 பேர் மட்டுமே உள்ளனர். இதில், 51 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. களப்பணியாளர்கள் 2,411 பேர் இருக்க வேண்டிய நிலையில், 795 பேர் என 32 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். 68 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன.
மூன்றில் ஒரு பங்கு மட்டுமே உள்ள ஊழியர்களையும், தற்காலிக பணியிட மாற்றம் என்ற பெயரில், அதிகாரிகள் அலுவலகங்கள், துணை மின் நிலையங்கள் என பல்வேறு இடங்களுக்கு மாற்றப்படுகின்றனர். இதனால், பணியாளர்களுக்கு வேலை பளு அதிகரித்து, மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். பல ஆண்டுகளாக தொடரும் பணியாளர் பற்றாக்குறையால் மின் நுகர்வோரும் கடுமையாக பாதிக்கின்றனர். எனவே, தேவையான பணியாளர் நியமிக்க மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment