730 மெகாவாட் மின் வரத்தில் சிக்கல்: தட்டுப்பாட்டை சமாளிக்க உதவியது காற்றாலை


மத்திய மின் தொகுப்பிலிருந்து, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய, 730 மெகாவாட் மின்சாரம், மின் பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்ப குளறுபடிகளால் தற்போது தடைபட்டுள்ளது. இதனால், மின் தட்டுப்பாடு இருந்த நிலையில், காற்றாலை மின்சாரம் கை கொடுத்துள்ளது.


தமிழகத்தில், சில மாதங்களாக காற்றாலை மின்சாரம் பெருமளவு கைகொடுத்து வருகிறது. சில நாட்களாக, மத்திய மின் தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய, 730 மெகாவாட் மின்சாரம், தொழில்நுட்ப குளறுபடிகளால் தடைபட்டுள்ளது. இவை, கல்பாக்கம், ராமகுண்டம் (ஆந்திரா), தல்சேர் கனிகா (ஒரிசா), மூன்று மின் நிலையங்களிலிருந்து கிடைத்தவை.கல்பாக்கத்திலிருந்து, தினமும் 330 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வேண்டும். அதற்கு பதிலாக, 230 மெகாவாட்தான் கிடைத்து வந்தது. மின் பாதையில் (கிரிட்) பழுதால், 230 மெகாவாட் மின்சாரமும், இரண்டு நாட்களாக கிடைக்கவில்லை.

தேசிய அனல் மின் நிலையத்தின், ராமகுண்டம் மின் நிலையத்திலிருந்து, 125 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வேண்டும். மின் பாதையில் குளறுபடி ஏற்பட்டு, இது தடைபட்டுள்ளது. அதுபோன்று, ஒரிசாவில் உள்ள, தல்சேர் கனிகா மின் நிலையத்திலிருந்து, உற்பத்தியில், 25 சதவீதமான, 500 மெகாவாட் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும். இரண்டு பிரிவுகளாக இவை தரப்பட்டு வந்தது. பராமரிப்பால் ஒரு தொகுப்பு நிறுத்தப்பட்டுள்ளதும், நிலக்கரி தரம் சார்ந்த பிரச்னையால், உற்பத்தி குறைந்துள்ளது. இவற்றில் இருந்து தற்போது, 125 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைத்து வருகிறது.

மூன்று நிலையங்களிலிருந்தும், 730 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு தடைபட்டுள்ளது. இரண்டு நாட்களாக இந்த நிலை நீட்டித்து வருவதால், மாநிலத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருந்தது. காற்றாலை உற்பத்தி அதிகரிப்பால், சிக்கலில் இருந்து தமிழகம் தப்பியுள்ளது.

கைகொடுத்தது:

காற்றாலை மூலம், சராசரியாக 3,000 முதல் 3,500 மெகாவாட் வரை மின்சாரம் கிடைத்து வந்தது. நேற்று, இது, 4,000 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, தட்டுப்பாடு ஓரளவு சமாளிக்கப்பட்டதால், பெரிய அளவில் மின்தடை போன்ற பிரச்னைகள் ஏற்படவில்லை. கல்பாக்கத்தில் மின் பாதை பிரச்னை ஓரிரு நாளில் தீர்ந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது. இங்கிருந்து, 230 மெகாவாட் மின்சாரமும் கிடைக்கும் என்பதால், பெரிய அளவில் மின் தட்டுப்பாடு வராது என மின்வாரியம் நம்பிக்கை தெரிவித்துஉள்ளது.

No comments: