இரண்டு ஆண்டுகளில், 480 நாட்கள் தொடர்ந்து பணியாற்றியிருந்தால், தானாக அந்த ஊழியரின் பணி நிரந்தரமாகி விடும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை : "இரண்டு ஆண்டுகளில், 480 நாட்கள் தொடர்ந்து பணியாற்றியிருந்தால், தானாக அந்த ஊழியரின் பணி நிரந்தரமாகி விடும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேட்டூர் அணை மின் வாரியத்தில், ஒப்பந்த தொழிலாளராக ராஜு என்பவர் பணியாற்றினார். 1991 முதல் 1999ம் ஆண்டு வரை, பல்வேறு ஒப்பந்ததாரர்களிடம், இவர் பணியாற்றியுள்ளார். அதன்பின், மின் வாரியத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்தார். 2003ம் ஆண்டு நவம்பரில் இறந்தார். இவரை பணி நிரந்தரம் செய்து, மின் வாரியம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
இதையடுத்து, மின் வாரியத்தில், 480 நாட்களுக்கும் மேல் பணியாற்றியுள்ளதால், பணி நிரந்தர அந்தஸ்து பெற கணவருக்கு உரிமையுள்ளது என்றும், குடும்ப பென்ஷன், பணிக்கொடை உள்ளிட்ட சலுகைகளை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி, சென்னை ஐகோர்ட்டில் ராஜுவின் மனைவி லட்சுமி மனு தாக்கல் செய்தார். மின் வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வாரியத்தின் நிரந்தர ஊழியர் இல்லை என்பதால், 1981ம் ஆண்டு சட்டப்படியான பலன்களை வழங்க முடியாது என கூறப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
ஒரு ஊழியர், இரண்டு ஆண்டுகளில் தொடர்ந்து, 480 நாட்கள் பணியாற்றியிருந்தால், அவருக்கு நிரந்தர ஊழியர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். கடந்த 1981ம் ஆண்டு சட்டப்படி, பணி நிரந்தரம் செய்ய வேண்டியது, அந்த நிறுவன உரிமையாளரின் கடமை. அவ்வாறு நிரந்தர அந்தஸ்து வழங்கப்படவில்லை என்றாலும், 480 நாட்கள் பணி முடித்திருந்தால், தானாக நிரந்தர ஊழியராக ஆகி விடுவார். எனவே, மனுதாரருக்கு குடும்ப பென்ஷன், பணிக்கொடை உள்ளிட்ட சலுகைகளை, எட்டு வாரங்களுக்குள் வழங்க வேண்டும். மனுதாரரின் மகள் வளர்மதிக்கு, கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரிய மனுவை, விதிகளின்படி, நான்கு வாரங்களுக்குள் பரிசீலித்து, பைசல் செய்ய வேண்டும். இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

No comments: