புதியமின் இணைப்பு சேவைக் கட்டணங்களை உயர்த்தமின் வாரியம்முடிவு வரும் 31ம் தேதிக்குள் இது தொடர்பான ஆட்சேபங்களை மக்கள் அனுப்பலாம்.


மின் கட்டணத்தைத் தொடர்ந்து, மின் இணைப்புக்கான டெபாசிட் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் உயர்த்த, மின் பகிர்மானக் கழகம் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்துக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருப்பதாகக்கூறி, சில மாதங்களுக்கு முன், தமிழகத்தில் மின் கட்டணத்தை அரசு பல மடங்கு உயர்த்தியது. அதற்கு முன்பாக, பொது மக்களின் கருத்தை அறிய, முக்கிய நகரங்களில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.தற்போது, முன்பு இருந்ததை விட, மின் வெட்டு அதிகமாக இருப்பதோடு, மின் கட்டணமும் மூன்று மடங்கு வரை உயர்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, பிற கட்டணங்களை உயர்த்தும் முயற்சியில் மின் பகிர்மானக்கழகம் இறங்கியுள்ளது.இதற்கான மனுவை (எம்.பி.எண்:16/2012) மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம், சமர்ப்பித்துள்ளது. அதன்படி, புதிய மின் இணைப்புக்கான கட்டணம், ஒரு முனை இணைப்புக்கு (சிங்கிள் பேஸ்) 3,525 ரூபாயும், மும்முனை இணைப்புக்கு (த்ரீ பேஸ்) 11 ஆயிரத்து 800 ரூபாயும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, முறையே 221 சதவீதமும், 159 சதவீதமும் உயர்த்த, மின் பகிர்மானக்கழகம் மனு செய்துள்ளது.இதில், ஒரு முனை இணைப்புக்கான மீட்டர் டெபாசிட் 700 ரூபாயில் இருந்து 825 ஆகவும்; மின் நுகர்வு டெபாசிட், 200 ரூபாயில் இருந்து 900 ஆகவும்; சர்வீஸ் கனெக்ஷன் கட்டணம் 250 ரூபாயில் இருந்து 900 ஆகவும், உயர்த்தப்படவுள்ளது.
விண்ணப்பப்பதிவுக் கட்டணம், 50 ரூபாயில்இருந்து 500 ஆக உயர்கிறது.மும்முனை இணைப்பில், இந்த கட்டணங்கள் முறையே 2,500 ரூபாயில் இருந்து 3,650 ஆகவும்; 1,400 ரூபாயில் இருந்து 9 ஆயிரமாகவும்; மூவாயிரம் ரூபாயில் இருந்து 4,500 ஆகவும்; 500 ரூபாயில் இருந்து 1,600 ஆகவும்; விண்ணப்ப பதிவுக் கட்டணம் 500 ரூபாயாகவும் உயர்த்தப்படவுள்ளது.மின் கட்டணம் செலுத்தாததால் துண்டிக்கப்பட்டு,
மீண்டும் இணைப்பு வழங்குவதற்கு இரு வித இணைப்புகளுக்கும், இதுவரை 60 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டது. இப்போது, 540 ரூபாய் மற்றும் 750 ரூபாயாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்வதற்கு, வசூலிக்கப்படும் 200 ரூபாயை, 900 ரூபாயாக உயர்த்த வேண்டுமென, மின் பகிர்மானக்கழகம் கோரியுள்ளது. இந்த மனுவில் மின் பகிர்மானக்கழகம் நிர்ணயித்துள்ள கட்டணத்தை, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஏற்குமா என்பதுதெரியவில்லை.மின் கட்டணத்தை உயர்த்த கடும் எதிர்ப்பு இருந்தபோதும், அதை உயர்த்த ஆணையம் ஒப்புதல் அளித்தது. அதேபோல, இதுவும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. வரும் 31ம் தேதிக்குள் இது தொடர்பான ஆட்சேபங்களை மக்கள் அனுப்பலாம்.

கட்டண உயர்வு பற்றிய தங்கள் ஆட்சேபங்கள் மற்றும் கருத்துக்களை, "செயலர், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், 19 ஏ, ருக்மிணி லட்சுமிபதி சாலை, எழும்பூர், சென்னை-600 008' என்ற முகவரிக்கு, ஆக.,31க்குள் கிடைக்குமாறு தபாலில் அனுப்பி வைக்கலாம்.

No comments: