தினமலர் செய்தி தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் மின் தடை பிரச்னை தீரும்

மேட்டூர், வள்ளூர், வடசென்னை, கூடங்குளம் ஆகிய நான்கு புதிய மின் திட்டங்களும், 2012ம் ஆண்டு இறுதிக்குள், செயல்படத் துவங்கி விடும். அதனால், இன்னும் ஐந்து மாதங்களுக்குள், 2,500 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கும். அப்படி கிடைத்தால், தமிழகத்தில் மின் தடை பிரச்னையே இருக்காது என, தமிழக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த மின் நிலையங்களின், அனைத்து யூனிட்களும் செயல்பட துவங்கும் பட்சத்தில், 2013ம் ஆண்டிற்குள், மொத்தம் 4,880 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தின் ஒட்டு மொத்த மின்சாரத் தேவை, 11,500 மெகாவாட். தற்போது, 10,500 மெகாவாட் மின்சாரம், தடையில்லாமல் வினியோகம் செய்யப்படுகிறது. இதில், 3,500 மெகாவாட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் கிடைக்கிறது. எல்லா காலங்களிலும், காற்றாலை மூலமான மின்சாரம் கிடைக்கும் என்பது நிச்சயம் இல்லாதது என்பதால், இதை முழுமையாக நம்ப முடியாது. அதேநேரத்தில், ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது, 1,000 மெகாவாட் மட்டுமே.

செவி சாய்க்கவில்லை:
தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்யும்படி, பலமுறை கோரிக்கை விடுத்தும், மத்திய அரசு, செவி சாய்க்கவில்லை. மத்திய தொகுப்பிலிருந்து, வெறும், 100 மெகாவாட் மின்சாரம் மட்டுமே, தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. எவ்வளவோ கேட்டுப் பார்த்தும், ஒரு மெகாவாட் மின்சாரத்தை கூட, கூடுதலாக தர, மத்திய அரசு முன்வரவில்லை. இது ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்வதில், மிகப்பெரிய குறை என்பது, உள்கட்டமைப்புகளில் இருக்கிறது.

பாதையில்லை:
தமிழகத்தையும், பிற மாநிலங்களையும் இணைக்கும், மின் கடத்திகளின் இணைப்பு சரியாக இல்லை. வட மாநிலங்களில் இருந்து, மின்சாரத்தை கொண்டு வந்து, தெற்கு மண்டல கிரீட்டில் சேமித்து வைக்க வகை செய்யும், மின் கடத்தி பாதைகள் எதுவும் முறைப்படி போடப்படவில்லை. மின் கடத்திகளை, இந்தியா முழுவதும் அமைத்து வரும் எச்.வி.டி.சி., முறையாக பாதை அமைக்காமல் உள்ளது.

அரசு மறுப்பு :
தமிழக மின் உற்பத்தி நிலையங்களுக்கு, நிலக்கரி தேவை என்பது, 14.5 மில்லியன் டன். இதை, மத்திய அரசு தர வேண்டும். ஆனால், தமிழகத்துக்கு, இதை முழுவதுமாக அளிக்க, மத்திய அரசு மறுத்து வருகிறது. 25 சதவீதம் வரை பற்றாக்குறையுடன் தான் அளிக்கப்படுகிறது. இதனால், கூடுதல் விலை கொடுத்து, வெளிநாடுகளில் இருந்து, 3.5 மில்லியன் டன் வரை, நிலக்கரி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது. இறக்குமதி காரணமாக, தமிழகத்தில் நிலக்கரியின் கையிருப்பு திருப்திகரமாக உள்ளது.

கூடுதல் மின்சாரம்:
வரும் ஆண்டுகளில், தமிழகத்தின் மின்சாரத் தேவை, ஓரளவுக்கு பூர்த்தியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மேட்டூர், வள்ளூர், வடசென்னை ஆகிய மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படத் தயாராகி விட்டன. இவற்றோடு, கூடங்குளம் அணுமின் நிலையமும் சேருமேயானால், 2012ம் ஆண்டு இறுதிக்குள், தமிழகத்துக்கு, 2,500 முதல், 2,700 மெகாவாட் வரை, கூடுதலாக மின்சாரம் கிடைக்கும். இந்த மின் உற்பத்தி நிலையங்களில், உள்ள யூனிட்டுகள் அனைத்தும் செயல்படத் துவங்கி விட்டால், மொத்தம் 4,880 மெகாவாட் மின்சாரம், தமிழகத்துக்கு கூடுதலாக கிடைக்கும். அந்த சூழ்நிலை வந்து விட்டால், தற்போது கிராமங்களில், ஐந்து மணி நேரமும், நகர்ப்புறங்களில் ஒரு மணி நேரமும் அமலில் உள்ள மின் தடை முற்றிலுமாக போய்விடும்.

மவுனம்:
இருப்பினும், செய்யூரில் அமைக்கப்பட உள்ளதாக, அறிவிக்கப்பட்ட அல்ட்ரா பவர் மின் உற்பத்தி நிலைய திட்டம், கடந்த நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த மின் திட்டம் நிறைவேறினால், 4,000 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்கும். அதுபோல, உடன்குடியில் பி.எச்.இ.எல்., நிறுவனமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து, 1,100 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் அமைக்க முடிவெடுத்தன. நான்கு ஆண்டுகளாகியும், இந்த திட்டமும் எடுத்துக் கொள்ளப்படவில்லை. பி.எச்.இ.எல்., நிறுவனம் இந்த திட்டம் பற்றி எதையும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தது. இதையடுத்து, இந்த திட்டத்தை, தமிழக அரசே செயல்படுத்தும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தொழில்துறை வளரும்:
இருப்பினும், இந்த அறிவிப்புக்கு பிறகும், பி.எச்.இ.எல்., நிறுவனம் மவுனம் காக்கிறது. நிலம் கையகப்படுத்தும் பிரச்னை, இந்த திட்டத்தில் இல்லை என்ற போதிலும், முதல்வரின் அறிவிப்புக்கு பி.எச்.இ.எல்., நிறுவனம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே, அடுத்த கட்டம் பற்றி யோசிக்க முடியும். இதுதவிர, எண்ணூரில், 660 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் திட்டமும், நிலுவையில் உள்ளது. இதற்கு தமிழகத்தைச் சேர்ந்தவரான ஜெயந்தி நடராஜன் தான் அனுமதி வழங்க வேண்டும். இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைக்கு வருமேயானால், தமிழகத்தின் மின் உற்பத்தி, திருப்திகரமான நிலைமைக்கு வருவதோடு, தொழில் துறையும் வேகமாக வளர்ச்சி ஏற்படும் என, தகவலறிந்த வட்டாரங்கள் டில்லியில் தெரிவித்தன.

-நமது டில்லி நிருபர்-

No comments: