சென்னை: ''மின் கோபுரங்கள் அமைக்க, இடம் தரும் விவசாயிகளுக்கு, ஒரு இலவச மின் இணைப்பு வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. ''அதேபோல், துணை மின் நிலையம் அமைக்க, இடம் தரும் விவசாயிகளுக்கு, இலவச மின் இணைப்பு வழங்குவது குறித்து, அரசு பரிசீலிக்கும்,'' என, மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்: அ.தி.மு.க., - ரவி: அரக்கோணம் தொகுதி, காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், வடமாம்பாக்கம் ஊராட்சி, மங்கம்மாப்பேட்டை காலனியில், 110 கிலோ வோல்ட் திறனில், துணை மின் நிலையம் அமைக்க, அரசு முன்வருமா?அமைச்சர் தங்கமணி: அப்பகுதியில், கூடுதல் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.ரவி: அரக்கோணம் பகுதியில் உள்ள, 33 கி.வோ., துணை மின் நிலையத்தை, 110 கி.வோ., துணை மின் நிலையமாக மாற்றித் தர வேண்டும். அதற்கு தேவையான இடம் உள்ளது.அமைச்சர் தங்கமணி: தேவை இருந்தால் பரிசீலிக்கப்படும்.
தி.மு.க., - கீதா ஜீவன்: துாத்துக்குடி, சிப்காட் வளாகத்தில் உள்ள, 30 கி.வோ., மின்மாற்றி பழுதடைந்துள்ளது. இதனால் அறிவிக்கப்படாத மின் தடை உள்ளது. அதை சரி செய்து தர வேண்டும்.அமைச்சர் தங்கமணி: ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்.சட்டசபை, காங்., தலைவர் ராமசாமி: 'விவசாயிகளுக்கு தட்கல் முறையில், மின் இணைப்பு கொடுக்கப்படும்' என, அறிவித்தீர்கள். இன்னும், அரசாணை வெளியிடப்படவில்லை. நடவடிக்கை எடுக்கப்படுமா?அமைச்சர் தங்கமணி: கடந்த ஆண்டு, தட்கல் முறையில், 10 ஆயிரம் விவசாயிகளுக்கு, மின் இணைப்பு வழங்கப்பட்டது.இந்த ஆண்டு, 10 ஆயிரம் விவசாயிகளுக்கு, மின் இணைப்பு வழங்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை, ஒரு வாரத்தில் வெளியிடப்படும்
.தி.மு.க., - பிச்சாண்டி: துணை மின் நிலையம் அமைக்க, நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு, இலவச மின்சாரம் வழங்க வேண்டும். அவ்வாறு கொடுத்தால், நிலம் கொடுக்க, ஏராளமான விவசாயிகள் தயாராக உள்ளனர். அதற்கு, அரசு நடவடிக்கை எடுக்குமா?அமைச்சர் தங்கமணி: மின் கோபுரம் அமைக்க இடம் தரும் விவசாயிகளுக்கு, ஒரு இலவச மின் இணைப்பு வழங்குவது என, அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது. அதேபோல், துணை மின் நிலையம் அமைக்க, இடம் தருவோருக்கு, இலவச மின் இணைப்பு வழங்குவது குறித்து, அரசு பரிசீலிக்கும்.தி.மு.க., - பி.கே.சேகர்பாபு: சென்னை, பாரீஸ் கார்னரில், 33 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.அதற்கு, காவல் நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை, மின் வாரியத்திற்கு வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு, துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.அமைச்சர் தங்கமணி: இடம் மாற்றம் செய்யும் பணி முடியவில்லை. இடம் கைக்கு வந்ததும், பணிகள் துவக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
No comments:
Post a Comment