பள்ளிச் சான்றுகளில் உள்ள பிறந்த தேதியை சரிசெய்ய உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த சகோதரர்கள் டி.ராஜ்குமார், டி.கண்ணப்பன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: திருக்காலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்தோம். எங்களது பிறப்புச் சான்றிலும், எஸ்எஸ்எல்சி சான்றிலும் பிறந்த தேதி முரண்படுகிறது. எனவே எங்களது பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் பள்ளி ஆவணங்களில் உள்ள எங்களது பிறந்த தேதியை மாற்றித் தர வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அதிகாரி உள்ளிட்டோருக்கு மனு அளித்தோம். எங்கள் மனுக்களை அதிகாரிகள் நிராகரித்தனர்.
எனவே, எங்கள் பிறப்புச் சான்று அடிப்படையில் பள்ளி ஆவணங்களில் திருத்தம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்குரைஞர் ஆஜராகி, விதிகள்படி பத்தாம் வகுப்பு முடிந்த பிறகு பள்ளி ஆவணங்களில் மாற்றங்களையோ, திருத்தங்களையோ பதிவு செய்ய முடியாது. பள்ளியில் சேர்க்கும்போது மனுதாரர்களது பெற்றோர்கள் இதுதொடர்பாக எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
இதைப் பதிவு செய்த நீதிபதி, இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது கீழ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால், மனுதாரர்கள் அதை செய்யவில்லை. விதிகளின்படி மனுதாரர்களின் மனுவை அதிகாரிகள் நிராகரித்தது சரியே எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment