தமிழகத்தின் மின் பகிர்மான கழகத்தை, பல நிறுவனங்களாக பிரிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இது குறித்து, கேரள மாநிலம், கொச்சியில் நடக்க உள்ள மாநாட்டில், முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. மத்திய அரசின், 'மின் சட்டம் - 2003'ன் படி, மின் பகிர்மான கழகம், பல நிறுவனங்களாக பிரிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகம், கேரளா உட்பட பல மாநிலங்களில், மின் பகிர்மான கழகங்கள் பிரிக்கப்படவில்லை. இதனால், மத்திய அரசின் நிதி உதவி பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. ஒத்துழைப்பு வேண்டும்இந்நிலையில், கேரள மாநிலம், கொச்சியில் உள்ள, 'போல்கட்டி' என்ற நட்சத்திர ஓட்டலில், மத்திய மின் துறை அமைச்சகம் சார்பில், 6, 7ல், மாநில மின் துறை அமைச்சர்கள் மாநாடு நடக்கிறது. மத்திய மின் துறை அமைச்சர் பீயுஷ் கோயல் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில், மாநில அமைச்சர்கள், 'பவர் பைனான்ஸ், ரூரல் எலக்ட்ரிபிகேஷன்' உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில், தமிழகம் சார்பில், மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மின் வாரிய தலைவர் சாய்குமார், எரிசக்தி துறை செயலர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் பங்கேற்க, விமான டிக்கெட் எடுக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது.
இதுகுறித்து, மத்திய எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மின் சட்ட திருத்த மசோதாவை, பார்லிமென்ட் குளிர்கால கூட்ட தொடரில் நிறைவேற்ற வசதியாக, மாநில அரசுகள் அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள் விடுக்கப்படும்; மாநில மின் வாரியங்களின், கடன் சுமையை குறைக்க, மின் பகிர்மான கழகத்தை, பல நிறுவனங்களாக பிரிப்பதன் அவசியம் குறித்தும், மாநாட்டில் ஆலோசனை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். நன்மை என்ன?கர்நாடகா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில், மின் பகிர்மான கழகம், இரண்டு, மூன்று நிறுவனங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு, 2.80 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். இதனால், மின் கட்டண வசூல், தடையில்லா மின்சாரம், மின் திருட்டு உள்ளிட்ட பணிகளை திறம்பட செய்ய முடியவில்லை. எனவே, மின் பகிர்மான கழகத்தை, நான்கு நிறுவனங்களாக பிரித்தால், நிறுவனங்களுக்கு இடையில் போட்டி ஏற்பட்டு, நுகர்வோருக்கு தரமான சேவை கிடைக்கும்.
மின் தேவை சரிவு
தமிழகத்தின் தினசரி மின் தேவை, 12 ஆயிரம் மெகாவாட்; மின் நுகர்வு, 27 கோடி யூனிட். வடகிழக்கு பருவ மழை துவங்கியதால், மின் தேவை, 10 ஆயிரம் மெகாவாட்டாக குறையும் என, மின் வாரியம் எதிர்பார்த்தது; ஆனால், கடந்த வாரம் வரை குறையவில்லை. இந்நிலையில், இரு தினங்களாக, சென்னை உட்பட, மாநிலம் முழுவதும் கன மழை பெய்து வருவதால், மின் தேவை, 10 ஆயிரம் மெகாவாட்; மின் நுகர்வு, 23 கோடி யூனிட்களாக குறைந்துள்ளது. இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மின் தேவை குறைந்ததால், அனல் மின் நிலையங்களில், 3,300 மெகாவாட்; நீர் மின் நிலையங்களில், 500 மெகாவாட் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது' என்றார்.
No comments:
Post a Comment