மத்திய அரசின் புதிய மின்சார சட்டத்தால் 52 ஆயிரம் கோடி கடன் தமிழக அரசின் தலையில் விழும் அபாயம் ( தினகரன் செய்தி )


சென்னை: மத்தியில் புதிய அரசு  பொறுப்பேற்றவுடன், எதிர்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், புதிய மின்சாரம் சட்டம் கொண்டு வந்து, மாநில அரசு வசம் உள்ள மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக, மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தேசிய அளவிலான கருத்தரங்கம் கொச்சியில் கடந்த 6ம் தேதி நடந்தது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநில மின்துறை அமைச்சர்கள், மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில், மின்வாரியம் வசம் உள்ள கடன்களை மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டால் தான், மத்திய அரசிடமிருந்து கடன் மற்றும் மானியங்களை பெற முடியும் என மத்திய அரசு கண்டிப்புடன் கூறியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது தமிழக அரசுக்கு மிகப் பெரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என பல்வேறு தரப்பினரும் அச்சம் தெரிவித்துள்ளனர். 

மொத்தமுள்ள 30 மாநிலங்களில் ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரபிரதேசம், அரியானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மின்வாரியங்கள்தான் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருவதோடு, அதிக அளவில் கடன்களையும் பெற்றுள்ளன. இதில் தமிழக மின்வாரியம் மட்டும் ரூ.52 ஆயிரம் கோடி கடனில் மூழ்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை “ஜிடிபி” 3 சதவீதத்துக்கும் குறையாமல் இருக்க வேண்டும். இப்படி இருக்கையில், மின்வாரிய கடன்களை மாநில அரசு ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், கல்வி, உணவு, மருத்துவம் உள்பட அத்தியாவசிய மானியங்களை குறைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும் அபாயமும் உள்ளது. இந்த புதிய மின்சார சட்ட திருத்த மசோதா நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி  தமிழக அரசு இதுவரை எந்த கருத்தும் கூறாதது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click