நாடு முழுக்க ஒரே மின்சாரத் தொகுப்பாகிவிட்டதால் இந்தத் தொகுப்புகளை நிர்வகிப்பவர்களின் கடமையும் பொறுப்பும் அதிகமாகியிருக்கிறது

தென்னிந்திய மின் தொகுப்பைத் தேசியத் தொகுப்புடன் இணைத்ததன் மூலம், தென்னிந்திய மின்சார வாரியங்கள், நுகர்வோரின் நீண்ட காலத் தேவை பூர்த்திசெய்யப்பட்டு உள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று ரெய்ச்சூருக்கும் ஷோலாப்பூருக்கும் இடையில், 765 கிலோ வாட் திறனுள்ள மின் பாதையைப் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்ததன் மூலம், இந்தத் தேவை பூர்த்தியாகியிருக்கிறது.

நாட்டில் உள்ள ஐந்து பெரிய மின் தொகுப்புகளில், தென்னிந்திய தொகுப்புதான் அளவில் மூன்றாவது இடத்தில் இருப்பது என்பதுடன் எப்போதும் மின்சாரத் தேவை மிகுந்ததுமாகும். மத்திய மின்சார ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரப்படிப் பார்த்தால், தென்னிந்திய மின் தொகுப்பில் தேவைக்கும் அளிப்புக்கும் இடையில் எப்போதும் பற்றாக்குறையே நிலவுகிறது. இது குறைந்தபட்சம் 7.7% ஆக இருக்கிறது. கோடைக்காலம் போன்ற மின் தேவை மிகுந்த பருவத்தில் இந்தப் பற்றாக்குறை 12.5% ஆகக்கூட உயர்ந்துவிடுகிறது.
தேசிய மின் தொகுப்புடன் இணைக்கப்படாததால், வட இந்தியத் தொகுப்பில் மின்சாரம் மிகையாக இருந்தால்கூட, அதைப் பெற முடியாத நிலையில் தென்னிந்திய மாநிலங்கள் தவித்தன. இப்போது இந்த இணைப்பு பூர்த்தியாகிவிட்டதால், அதிக உயர் அழுத்தமுள்ள மின்சாரத்தை வட மாநிலங்களிலிருந்து இந்த இணைப்பு வழியாக நேரடியாகப் பெற முடியும். ஆனால், இதன் பயன்பாடு ஓரளவுக்குத்தான் என்பதுடன் அவ்வளவு திறமையான வழிமுறை அல்ல என்பதும் குறிப்பிடத் தகுந்தது.
இந்த இணைப்பின் காரணமாக 232 கிகா வாட்ஸ் மின்சாரம் கொண்ட ஒரே தொகுப்பு சாத்தியமாகி இருக்கிறது. இந்தத் தொகுப்பு முழு அளவில் பயன்பாட்டுக்கு வர இன்னும் சில தொழில்நுட்ப வேலைகள் முடிக்கப்பட வேண்டியிருக்கின்றன. அதேசமயம், நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் மின்சாரம் கிடைக்க இது மிகவும் உதவிகரமாக இருக்கும். அத்துடன் தேசிய மின்சாரச் சந்தை ஏற்படவும் இது வழிவகுத்திருக்கிறது. இதற்கு முன்னால் தென்னிந்திய மாநிலங்கள் தங்களுக்குத் தேவைப்படும் மின்சாரத்தை வட இந்தியத் தொகுப்பிலிருந்து பெற முடியாததால், தென்னிந்தியாவிலேயே அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருந்தது. இனி, நாட்டின் எந்தப் பகுதியில் விலை குறைவாக மின்சாரம் கிடைக்கிறதோ அங்கிருந்து வாங்கிக்கொள்ள முடியும். கோடைக்காலத்தில் வட இந்தியாவில் மின்சாரத்துக்குத் தரப்பட்ட விலையைவிட, இரண்டு அல்லது மூன்று மடங்குகூடக் கொடுத்து தென்னிந்திய மின் வாரியங்கள் வாங்கிவந்தன.
நாடு முழுக்க ஒரே மின்சாரத் தொகுப்பாகிவிட்டதால், இந்தத் தொகுப்புகளை நிர்வகிப்பவர்களின் கடமையும் பொறுப்பும் அதிகமாகியிருக்கிறது. நாடு முழுக்க ஒரே மின் தொகுப்பை உருவாக்குவது பெரிய சவாலாக இருந்தது என்றால், அந்தத் தொகுப்பைத் திறமையாகப் பராமரிப்பது அடுத்த சவாலாகும் என்பது சொல்லாமலே புரியும்!

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click