தமிழகம் முழுவதும் அனைத்து விதமான மின் இணைப்புகளுக்கும் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாப்ட்வேர் இப்போது கோபிச்செட்டிப்பாளையத்தில் சோதனை அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வரும் ஜூன் மாதத்துக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் முறை முழுவீச்சில் செயல்பாட்டுக்கு வரும். இந்த விண்ணப்ப முறை அமலுக்கு வந்தால் மின்வாரிய அலுவலகங்களுக்கு பொதுமக்கள் வீணாக அலைவது குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் ஆர்-ஏபிடிஆர்பி (The Restructured Accelerated Power Development and Reforms Programme R-APDRP) திட்டத்தின்கீழ் பல்வேறு புதிய அம்சங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டத்தின்கீழ் மின் கட்டணத்தை ஆன்-லைனில் செலுத்தும் வசதி உள்ளிட்டவை ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மின் இணைப்புகளுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் புதிய முறையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக மின் வாரிய அதிகாரிகள் கூறியது:
இந்தத் திட்டத்தின் கீழ், மின்வாரியத்தின் இணையதளத்தில் மின் இணைப்பு கோரி எந்த இடத்தில் இருந்தும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தோடு உரிய ஆவணங்களையும் விண்ணப்பதாரர் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அவர்களது விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட உதவி மின் பொறியாளர் அலுவலகங்களுக்கு அனுப்பப்படும். குறிப்பிட்ட நாள்களுக்குள் அந்த விண்ணப்பங்களின் மேல் மின்வாரிய அலுவலர்கள் நடவடிக்கை வேண்டும்.
இதன் மூலம் மின் இணைப்புகள் பெறுவதில் தேவையற்ற காலதாமதம் தவிர்க்கப்படும். அதோடு, வேலைக்குச் செல்லும் நபர்கள் மின்வாரிய அலுவலகங்களுக்கு அலைவதும் தவிர்க்கப்படும்.
அதேபோல், தவறான நோக்கத்துடன் விண்ணப்பத்தில் கோளாறு உள்ளதாகக் கூறி யாரையும் அலைக்கழிக்க முடியாது. ஏனென்றால், விண்ணப்பத்தில் உள்ள தகவல்கள் இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்யப்படும். எனவே, விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கான காரணங்களையும் அவர்கள் கூற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பிறகு, வீட்டுப்பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை மட்டும் மின் வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்வார்கள். அவர்களின் ஆய்வுக்குப் பிறகு மின் இணைப்பு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
எஸ்.எம்.எஸ். மூலம் மின் கட்டணம்: மின் கட்டணம் தொடர்பான எஸ்.எம்.எஸ். பெறும் திட்டத்தின் கீழ் இதுவரை 50 லட்சம் பேர் தங்களது செல்போன் எண்களைப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சேவை ஜனவரி மாத இறுதியில் இருந்து நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின் கட்டணத் தொகை, கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் உள்ளிட்ட விவரங்கள் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்படும். அனைத்து மின் நுகர்வோர்களும் இதில் பதிவு செய்துகொள்ளலாம். மின் கட்டணம் செலுத்தும் மையங்கள், மின்வாரிய உதவிப் பொறியாளர், செயற்பொறியாளர் அலுவலகங்களில் தங்களது செல்போன் எண்ணை நுகர்வோர் பதிவு செய்யலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment