பற்றாக்குறை! : மீட்டர் தட்டுப்பாடு - நிலைமையை சமாளிக்க புது திட்டம் அறிவிப்பு

POWER METER

தமிழக மின் வாரியம் உரிய நேரத்தில் மீட்டர் கொள்முதல் செய்யாததால், 15 லட்சத்திற்கு மேற்பட்ட புதிய இணைப்புகளுக்கு மீட்டர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதிய இணைப்பு கேட்டவர்கள் மீட்டர் இல்லாமல், மாதக்கணக்கில் காத்துக்கிடக்கின்றனர். தமிழகத்தில் இரண்டு கோடி மின் இணைப்புகள் உள்ளன. இவற்றில் விவசாயம், குடிசை ஆகிய இலவச மின்சார இணைப்புகளுக்கு மீட்டரும் இல்லை. கணக்கீடும் இல்லை. தோராயமான அடிப்படையில் மானியம் பெறப்படுகிறது.
மீட்டர் தட்டுப்பாடு : மற்ற இணைப்புகளுக்கு, ஒரு முனை இணைப்பு மற்றும் மும்முனை இணைப்பு மீட்டர்கள் பொருத்தப்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக, தமிழக மின்வாரியம் போதுமான அளவுக்கும் மீட்டர் கொள்முதல் செய்யாமல், அலட்சியமாக இருந்ததால், மின் மீட்டர் தட்டுப்பாடு தற்போது லட்சக்கணக்கில் உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில், ஒன்பது மண்டல மின்வாரிய எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு, 15 லட்சம் மீட்டர் வரை தேவையுள்ளது. கட்டுமான பணி மேற்கொள்தல், தொழிற்சாலை, புதிய வீடுகள், கடைகள், ஒரு முனை இணைப்பிலிருந்து மும்முனை இணைப்பாக மாறியவை, தனி இணைப்பு உள்ளிட்ட அனைத்து புதிய இணைப்புகளுக்கும் மீட்டர் இல்லாமல், காத்துக்கிடக்கும் நிலை உள்ளது. சாதாரணமாக மின்வாரியத்தின் ஒரு பிரிவு அலுவலக எல்லையில் மட்டும் குறைந்தது, 500 மீட்டர்கள் வரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வருவாயும் போச்சு : பல இடங்களில் காலாவதியான பழைய மெக்கானிக் மீட்டர்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இவற்றால் மின்வாரிய வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் சோதனை செய்யப்படாத புதிய எலக்ட்ரானிக் மீட்டர்கள், கடுமையான வேகத்தில் ஓடி, வாடிக்கையாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன. மின்வாரியத்தால் முடியாவிட்டால், தனியாரிடம் மீட்டர் வாங்குவதற்காவது ஏற்பாடு செய்ய, ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி உத்தரவிட்டது. இதையடுத்து, புதிய திட்டத்தை மின்வாரியம் நடைமுறைக்கு கொண்டு வருகிறது.
புதுதிட்டம் : இதன்படி, "லார்சன் அன்ட் டூப்ரோ (எல் அண்ட் டி)' மற்றும் "லிங்க்வெல் டெலிசிஸ்டம் பிரைவேட் லிமிடெட்' ஆகிய நிறுவனங்களுக்குட்பட்ட மீட்டர்களை வாங்கி கொள்ளலாம். வரும் 28ம் தேதி முதல், இந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ கடைகளில் மீட்டரை வாங்கி, மின்வாரிய அதிகாரிகளின் ஒப்புதலுடன் பயன்படுத்தலாம்' என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒன்பது மின் மண்டலங்களிலும், மீட்டர் வாங்க அங்கீகரிக்கப்பட்ட கடைகள் பட்டியலை தமிழக மின்வாரிய இணைய தளத்தில், மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
மீட்டர் சோதனை திட்டத்தில் குளறுபடி : "அங்கீகரிக்கப்பட்ட கடைகளில், அங்கீகரிக்கப்பட்ட நிறுவன மீட்டர்களை நுகர்வோர் வாங்கி, அதை மின்வாரிய பிரிவு அதிகாரியிடம் வழங்க வேண்டும். அவர் மின்வாரியத்திற்குட்பட்ட "மீட்டர் ரிலே டெஸ்டிங்' என்ற எம்.ஆர்.டி.,மீட்டர் சோதனை மையத்திற்கு அனுப்புவார். அங்கு புதிய மீட்டர்களை சோதனை செய்து, பின் பிரிவு அதிகாரியிடம் வழங்கப்படும். இதையடுத்து, பதிவுமூப்பு அடிப்படையில் காத்திருக்கும் நுகர்வோருக்கு மீட்டர் பொருத்தப்பட்டு இணைப்பு வழங்கப்படும்' என, ஒழுங்குமுறை ஆணையத்தில் மின்வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால், இத்திட்டம் நடைமுறைக்கு சாத்தியமில்லாத குளறுபடி திட்டம் என, மின்துறை பிரிவு அதிகாரிகள் பலர் கூறுகின்றனர். இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறும்போது,"எம்.ஆர்.டி., எனப்படும் சோதனை மையங்கள் பெரும்பாலான இடங்களில் மூடப்பட்டு விட்டன. சொற்ப எண்ணிக்கையில் புகாரில் சிக்கும் மீட்டர்களை மட்டுமே சோதனை செய்ய சில மையங்கள் உள்ளன. அங்கும் தேவையான ஆட்களோ, தொழில்நுட்ப கருவிகளோ இல்லை. எனவே, இந்த திட்டம் கண்துடைப்பு திட்டமாகவே தோன்றுகிறது. இதன்படி மீட்டரை சோதனையிடுவது முடியாத காரியம்' என்றார்.