அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு, அமலில் உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்திட்டத்தை, மீண்டும் அமல்படுத்துவேன் என, முதல்வர் ஜெயலலிதா அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர், உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்த முடிவு எடுத்துள்ளனர். இன்று, திண்டுக்கல் மாவட்டத்தில் ஆரம்பிக்கும் போராட்டத்தை, முதல்வரின் தொகுதியான, ஸ்ரீரங்கத்தில் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.பழைய ஓய்வூதியத் திட்டத்தில் பணிக்கொடை, அகவிலைப்படி உயரும் போது எல்லாம், ஓய்வூதியதாரர்களுக்கும், அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதியதாரர் இறந்தால், அவரது குடும்பஉறுப்பினர்களுக்கு, பாதி ஓய்வூதியம் என, பல்வேறு சலுகைகள் உள்ளன.பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில், இது எதுவுமே இல்லாததால், இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்என்பது, அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கை.கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தை, சென்னையில் ஜெயலலிதா முடித்தபோது, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் என, தெரிவித்திருந்தார்.இந்த கோரிக்கையை நிறைவேற்றக் கோரி, அரசு ஊழியர், ஆசிரியர்கள், தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சட்டசபை கூட்டத்தொடர் துவங்கி இருப்பதால், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர்.