புது மின் இணைப்புக்கு கட்டணம் பல மடங்கு உயர்த்த மின்வாரியம் முடிவு: கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - தினகரன் செய்தி

சென்னை: புது மின் இணைப்புக்கான கட்டணத்தை உயர்த்துவது குறித்து நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் மின் இணைப்பு கட்டணத்தை உயர்த்த கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக மின்வாரியம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. மின்கட்டணம் அதிகரித்தும் மின்கட்டணம் கடனில் இருந்து மீள முடியாத நிலை உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண மின்வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதன் அடிப்படையில், பதிவுக் கட்டணம், மின் இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீடு, வளர்ச்சி கட்டணம், ஆரம்ப மின் பயன்பாடு உள்ளிட்ட பல கட்டணங்கள் அடங்கிய புதிய மின் இணைப்புக்கான தொகையை உயர்த்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்காக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் மின் வாரியம் சார்பாக மனு அளிக்கப்பட்டது. அதில் ரூ.1600 என்று நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை ரூ.4600 ஆக உயர்த்தும்படி கூறப்பட்டுள்ளது. இதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் தி.நகரில் நடைபெற்றது. தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையர் சந்திரசேகர் தலைமை வகித்தார். உறுப்பினர்கள் தா.பிரபாகர்ராவ், வெங்கடசாமி, செயலாளர் சின்னராஜலூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பொதுமக்கள், விவசாயிகள், சக்கரை ஆலை பிரநிதிகள், ஓய்வு பெற்ற மின்வாரியத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், புதிய மின் இணைப்பு கட்டணத்தை பல மடங்கு உயர்த்துவதை ஏற்க முடியாது என்று பொதுமக்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, புதிய மின் இணைப்பு கட்டணம் 200 மடங்காக உயர்த்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை பொதுமக்கள் மேல் திணிக்க கூடாது. இதற்கு மாற்றாக வேறு ஏதாவது திட்டத்தை செயல்படுத்தி நஷ்டத்தை ஈடுகட்ட முயற்சிக்க வேண்டும். உதிரி பாகங்கள் தரமில்லாமல் வாங்குவதால் தான் இதுபோன்ற நஷ்டத்துக்கு காரணம். மின் இணைப்புக்கான டெபாசிட் தொகையை இந்த அளவுக்கு உயர்த்தினால் கடன் வாங்கி தான் கட்ட முடியும். எந்த கிராமத்திலும் டிரான்ஸ்பார்கள் பராமரிக்கப்படுவதில்லை. இந்நிலையில் பொதுமக்களிடம் டெபாசிட் தொகையை இந்த அளவுக்கு எதிர்பார்ப்பதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இப்படி பல மடங்கு ஏற்றினால் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை தான் உருவாக்கும். இந்த ஆட்சியை கவிழ்க்கிற சூழ்நிலையை ஏற்படுத்திவிடாதீர்கள். இவ்வாறு உணர்ச்சி பொங்க பேசினார்கள். கொந்தளிப்பை உருவாக்கும் ஓய்வு பெற்ற மின்வாரிய உதவி செயற் பொறியாளர் ஒருவர் பேசுகையில், எதற்காக கருத்து கேட்கிறீர்கள் என்ற தகவல் கூட மக்களை சென்றடையச் செய்யவில்லை. தற்போது ஒரு முனை மின் இணைப்பை ₹1600க்கு பெறலாம். ஆனால் இதை அமல்படுத்தினால் ₹24ஆயிரம் ஆகிவிடும். மும்முனை மின் இணைப்பு பெற வேண்டுமானால் ₹50ஆயிரம் வரை செலுத்த நேரிடும். ஒரே அடியாக உயர்த்துவது மக்களிடம் கொந்தளிப்பை உருவாக்கும்.

No comments: