மின்வாரியத்தில் 7 ஆயிரம் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: மின்துறை அமைச்சர் தினமணி செய்தி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவிப் பொறியாளர் பணியிடங்கள் உள்பட 7 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என மின்சாரம், மதுவிலக்கு, ஆயத் தீ ர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார். 

குமாரபாளையத்தை அடுத்த பள்ளிபாளையத்தில் முதல்வரின் சிறப்பு குறைதீர் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று மனுக்களைப் பெற்றுகொண்ட  அவர் செய்தியாளர்களிடம் கூறியது: -

உச்சநீதிமன்ற உத்தரவின்படி,  பணி நியமனத்தில் பிற மாநிலத்தவரையும் சேர்த்துக்கொள்வதை தமிழ்நாடு மின்சார வாரியமும் பின்பற்றுகிறது. இதன்படி, வடமாநிலத்தவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டாலும், தமிழ் தெரிந்தால் மட்டுமே அவர்களுக்கு பணி வழங்கப்படும். 

காலியாக உள்ள உதவிப் பொறியாளர், வயர்மேன், கேங்மேன் உள்ளிட்ட 7 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட்டு, காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் 

மின்கட்டணம் உயர்த்தப்படாது: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.7 ஆயிரம் கோடிக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு சம்பள உடன்பாடு செய்ததில் ரூ.1,500 கோடி,  கஜா புயல் நிவாரணம் ரூ.2,500 கோடி, மத்திய தொகுப்பில் இருந்து பெறப்படும் மின்சாரத்துக்கு யூனிட் ஒன்றுக்கு 44 பைசா விலையுயர்வு,  நிலக்கரி,  அவற்றை ரயிலில் கொண்டு வருதல் உள்ளிட்ட செலவினங்களால் இந்தச் சுமை ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தமிழக அரசு நிதியைக் கொண்டு இச்சுமை சரி செய்யப்படுவதால் மின் கட்டணம் உயர்த்தப்படாது. 

மின்தட்டுப்பாடு இல்லை: பராமரிப்புப் பணிகள் முடிந்து மின் உற்பத்திக்கு அனல் மின்நிலையங்கள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்துக்கு அனல் மின் நிலையங்களிலிருந்து 4,500 மெகாவாட், மத்தியத் தொகுப்பிலிருந்து 6,500 மெகாவாட், நீண்டகால கொள்முதல் 3,300 மெகாவாட்,  நீர்மின் திட்டத்திலிருந்து 2,000 மெகாவாட்  மின்சாரம் கிடைப்பதால் மின்வெட்டு ஏற்படாது. காற்றாலை மின்சாரம் தற்போது குறைந்து வந்தாலும் மின்தட்டுப்பாடு  ஏற்படும் சூழல் இல்லை. 

மத்திய மின்துறை புதிய மின்கொள்கை குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளது. அது குறித்த வரைமுறைகள் கிடைத்த பின்னரே கருத்து தெரிவிக்க முடியும்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click