AESU சுற்றறிக்கை எண் – 12 / 28-10-2015


   05-10-2015 அன்று மின்வாரியத் தலைவருடன் சம்மேளனம், நமது சங்கம், தொ.மு.ச. மத்திய அமைப்பு, ஐ.என.டி.யூ.சி சங்கங்களின் பொதுச்செயலாளர்கள் கீழ்கண்ட பிரச்சனைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினோம்.

1.     இளநிலை உதவியாளர்கள் உள்முகத் தேர்வு நியமனத்திற்கு, கல்வித் தகுதி மாற்றத்தினை மறுபரிசீலனை செய்திட,
2.     களத் தொழிலாளர்கள் பதவி உயர்வு பிரச்சனையில், ஏற்பட்டிருக்கும், தேக்க நிலையை அகற்றிட ,
3.     அட்டைப் பட்டியல் ஊழியர்களின் வசூல் மைய நேரத்தினை, அதிகரித்திடும் திட்டத்தினை கைவிட ,
4.     அனைத்து பிரிவுகளிலும் இருக்கும், அபரிமிதமான துவக்கநிலை காலிப் பொறுப்புகளில், குறைந்தது
50 சதவீதமாவது நிரப்பிட
மின்வாரியத் தலைவர் மேற்கண்ட 4 பிரச்சனைகளிலும் சாதகமான முடிவுகள் எடுப்பதாகவும், குறிப்பாக 1950 பேர் நேரடித் தேர்வு மூலமாக பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்வு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த சுற்றறிக்கையில், பிலிப்பைன்ஸ் நாட்டுத் தலைநகர் மணிலாவில், அக்டோபர் 12 முதல் 14 வரை, ஆசிய வளர்ச்சி வங்கி தொடர்பான பிஎஸ்ஐ கருத்தரங்கில், பொதுச்செயலாளர் கலந்து கொள்ளவுள்ளார் என்று தெரிவித்திருந்தோம். ஆனால் அவரது துணைவியாரின் உடலநலக் குறைவின் காரணமாக, அவரது மணிலா பயணம், கடைசி நேரத்தில் ரத்து செய்யப் பட்டது.

       இளநிலை உதவியாளர் நியமனத்திற்கான, கல்வித்தகுதி மாற்றத்தை எதிர்த்து, சமரசப்பேச்சு வார்த்தை 15-10-2015-ல் நடைபெற்றது. நமது கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு வருவதால் பேச்சு வார்த்தையை ஒத்திவைக்க வேண்டும் என்று நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று 03-11-2015க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
       18-10-2015 அன்று சென்னையில், 178-வது மாநிலச்செயற்குழு, சங்க தலைமையகத்தின் மூன்றாவது மாடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள  “கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டம் துவங்குவதற்கு முன் “அரங்கினை முறைப்படி பொதுச்செயலாளர் திறந்து வைத்தார்.
செயற்குழுவில்  02-09-2015 அன்றைய வேலை நிறுத்தம் பற்றி மதிப்பாய்வு செய்யப்பட்டது. உறுப்பினர் எண்ணிக்கையை பெருக்கவும், சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேற, தேவைப்படும் நேரடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் சங்கத்தின் கட்டமைப்பினை பலப்படுத்திட வேண்டும் என்றும், இதற்கு கிளை முதல் மாநிலம் வரை, அமைப்பின் தேர்தல்களை நடத்தி பொறுப்பாளர்களை தேர்வு செய்வது அவசியம் என்பதை விவாதித்த மாநிலச் செயற்குழு, 2016-17 தேர்தலுக்கான அட்டவணைகளையும், தேர்தல் விதிமுறைகளையும்   தயார் செய்தது. 31.12.2015-க்குள் உறுப்பினர் சந்தா மத்தியசங்கத்தில் பெறப்பட்டவர்களுக்கு மட்டுமே 2016-17 தேர்தல்களில் வாக்களிக்கவும், போட்டியிடவும் உரிமை உண்டு. அதேபோல் 31.12.2015-க்குள் மத்தியசங்கத்தில் உறுப்பினர் சந்தா பங்குத் தொகையை செலுத்திய கிளைகளில் / வட்டங்களில் மட்டுமே தேர்தல்களை நடத்த முடியும்.
கடந்த 177வது மாநிலச் செயற்குழுவில் திரு.ஆறுகுட்டி அவர்களது பிரச்சனையில்  வட்டச்செயலாளர் பொறுப்பிலிருந்து 6 மாதத்திற்கான பதவி விலகலை ஏற்றுக்கொள்வது என முடிவு செய்யப் பட்டதில், ராஜினாமாவிற்கு காலத்தை குறிப்பிடுவது சரியல்ல என்ற கருத்துக்கள் முன்வைக்கப் பட்டதால் “6 மாத காலம் என்பதை எடுத்து விட்டு தீர்மானம் திருத்தம் செய்யப் பட்டது.
எதிர்வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், மின்சார மசோதா 2014 கொண்டுவரப்படும் எனத் தெரிவதால், அதனை கைவிட வலியுறுத்தி, அகில இந்திய மின்சாரத் தொழிற்சங்க சம்மேளனங்கள்
-2-
 விடுத்த வேண்டுகோளை ஏற்று,  08-12-2015 அன்று, ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதென செயற்குழுவில் முடிவு செய்யப் பட்டது.
நெடுங்காலத்திற்கு முன்பே மின்வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றி        08-08-1998-ல் அடையாளம் காணப்பட்டும், தொழிலாளர் ஆய்வர் உத்திரவுபடியும்,வாரிய வழிகாட்டுதல்படியும், ஒப்பந்தத் தொழிலாளராக நியமனம் செய்யப் பட்டும் 01-04-2003-க்குப் பிறகு பணிநிரந்தரம் செய்யப் பட்டவர்களுக்கு, பழைய பென்ஷன் திட்டத்தின்படி ஓய்வூதியம் கோருவதற்கு உரிமை உண்டு என்பதால், அவர்களுக்கு உரிய சமூக நீதியை பெற்றுத் தருவதற்கு, சங்கம் நடவடிக்கை மேற்கொள்வதென்று, செயற்குழுவில் முடிவு செய்யப் பட்டது.
இதற்காக படிவங்கள் மத்திய சங்கத்தில் தயார் செய்யப்பட்டு, வட்டச்செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப் படுகிறது. பென்ஷன் பெறவிரும்பும் களத்தொழிலாளர்கள், கணக்கீட்டாளர்கள் 2-ம் நிலை முதலியோர் கையொப்பமிட்டு  மேற்பார்வை பொறியாளருக்கு முன்நகல் விண்ணப்பம் அளித்து விட்டு, ஒரு நகலினை வழிமுறையாகவும், ஒரு நகலினை சங்கத்திற்கும் அனுப்பி வைக்க வேண்டும். பழைய திட்டப்படி ஓய்வூதியம் வழங்கிட, அவ்வளவு சாதாரணமாக நிர்வாகம் முன்வராது. சட்டப்படி தீர்வு காண்பதுதான் ஒரே வழி. எனவே விண்ணப்பம் அளிக்கும் ஒவ்வொரு உறுப்பினரிடமிருந்தும் வழக்குச் செலவாக ரூபாய் 1000/- பெற்று மத்திய சங்கத்திற்கு, உறுப்பினர் விண்ணப்பத்துடன் அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம். இப்பிரச்சனையின் முக்கியத்துவதையும் தன்மையையும் உணர்ந்து கவனத்துடன் விரைவாக செயல்படுமாறு பொறுப்பாளர்களை வேண்டுகிறோம்.

       23-10-2015 aifudஅன்று வாரியத்தில் 2014-15-ம் ஆண்டுக்கான போனஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நமது சங்கத்தின் சார்பில் பொதுச்செயலாளருடன் தலைவர் மற்றும் நிதிச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். 1) போனஸ் சட்டம் 1965-ன்படி தகுதி படைத்த அனைத்து தொழிலாளர்களுக்கும்         25% போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க வேண்டும். 2) போனஸ் தொகையைக் கணக்கிடுவதற்கு மாத ஊதியம் ரூ.7000/- என நிர்ணயம் செய்திட வேண்டும். 3) வாரிய வழிகாட்டுதல்களின் படி ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு ரூ.4000/- கருணைத் தொகையாக வழங்க வேண்டும்       4) வாரிய அலுவலர்களுக்கும், கருணைத்தொகையை, தொழிலாளர்களுக்கு வழங்கும் கருணைத் தொகைக்கு சமமாக வழங்க வேண்டும். 5) போனஸ் மற்றும் கருணைத் தொகையை தீபாவளி பண்டிகைக்கு 10 நாட்கள் முன்னதாக வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் பட்டது. பெறவிருக்கும் போனஸ் தொகையில் ரூ.200/- நன்கொடை வசூலித்து, மத்திய சங்கத்திற்கு ரூ.100/-ம்,வட்டத்த்திற்கு ரூ.50/-ம் அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

       06-11-2015 அன்று கேரள மாநிலம், கொச்சியில் நடைபெறவுள்ள அகில இந்திய மின்சார அமைச்சர்களின் மாநாட்டினையொட்டி, மின்சார மசோதா 2014-ஐ கைவிட வற்புறுத்தி நடைபெறும், தொழிலாளர்களின் பேரணியில் கலந்து கொள்ள நமது சங்கத்தின் கோவை மற்றும் ஈரோடு மண்டலங்களின் சார்பில் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் தனிப் பேருந்தில் கோவையிலிருந்து புறப்பட்டு செல்லுகின்றனர்.

              27-11-2015 அன்று மின்வாரியத்தில் களப் பிரிவு இருவழிப்பாதை பதவி உயர்வில் தொழிலாளர்களுக்கு ஏற்படும் குறைகளைக் களைந்திட நமது சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. நமது சங்கத்தின் சார்பில் பொதுச்செயலாளருடன் தலைவர் மற்றும் நிதிச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிர்வாகத்தின் தெளிவற்ற ஒரு அணுகுமுறையால் எந்த முடிவும் எடுத்திட முடியவில்லை.

உறுப்பினர் எண்ணிக்கையை பெருக்கிடுவோம். சங்கத்தை மேலும் பலப் படுத்துவோம்.
                                                              தோழமையுள்ள

                                                            பொதுச்செயலாளர். 

பெறுநர். கிளைச்செயலாளர்கள், கோட்டச்செயலாளர்கள வட்டச்செயலாளர்கள்,   
        மண்டலச்செயலாளர்கள், மற்றும் மத்திய சங்கப் பொறுப்பாளர்கள்.

நகல் .  செய்தி மடல்.    

No comments:

Acceptance of Consumer Meter

  Acceptance of Consumer Meters - Details of retail outlet of the firm M/s. Holley Meters India LLP, Derabassi for sale of consumer meters o...