சூரிய சக்தி மின்சாரம்: வழிமுறை, மானியம் எப்படி?

தொகுப்பு, அடுக்குமாடி வீடுகளில் சூரிய சக்தி மின் அமைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் எவ்வளவு திறன் கொண்ட சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கலாம்?

ஒரு மாதத்திற்கு, 1,000 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டில், ஐந்து - ஆறு கிலோ வாட் திறன் கொண்ட, மின் நிலையம் அமைக்கலாம்.சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க எவ்வளவு செலவாகும்?
ஒரு கி.வா., பேட்டரி வசதியுடன் கூடிய, மின் நிலையம் அமைக்க, 1.50 லட்சம் ரூபாய்; 'பேட்டரி' இல்லாமல் இருந்தால், ஒரு லட்சம் ரூபாய் செலவாகும்.
அரசு மானியம் வழங்குகிறதா?
ஆம். தமிழக அரசு, ஒரு கி.வா., மின் நிலையம் அமைக்க, 50 ஆயிரம் ரூபாய், மானியம் வழங்குகிறது. இதில், மத்திய அரசு பங்கு, 30 ஆயிரம் ரூபாய். இதை பெற, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, 'டெடா' அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மத்திய அரசு, ஒரு கி.வா., அல்லது அதற்கு மேல் மின் நிலையம் அமைத்தால், தலா, ஒரு கிலோ வாட்டிற்கு, 20 ஆயிரம் ரூபாய், மானியம் வழங்குகிறது. இதை, சூரிய மின் சாதன தயாரிப்பாளர் மூலம் பெற்று கொள்ளலாம்.
பேட்டரியில் எவ்வளவு மின்சாரம் சேமிக்க முடியும்?
பகல் நேரத்தில், மின்சாரம் பயன்படுத்தாமல் இருந்தால், 80 சதவீத மின்சாரத்தை, பேட்டரியில் சேமிக்கலாம். இதன் மூலம், மோட்டார் பம்ப் தவிர்த்து, விளக்கு, பேன், 'டிவி', 'ஏசி' போன்ற சாதனங்களை இயக்கலாம்.
சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க எவ்வளவு இடம் தேவை?
ஒரு கிலோவாட் மின் நிலையத்திற்கு, 75 சதுர அடி இடம் தேவை.சூரிய சக்தி மின் நிலையத்திற்கு என்ன உபகரணம் பயன்படுத்தப்படுகிறது?
சூரிய மின் தகடு - பேனல், இன்வெர்டர், பேட்டரி ஆகியவை தேவை. பேட்டரி இல்லாத பட்சத் தில், 'நெட்' மீட்டர் பொருத்தி, சூரிய சக்தி மின்சாரத்தை, மின் வாரியத்திற்கு வழங்கலாம்.
மின் வினியோகம் எப்படி?
சூரிய மின் சக்தி மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம், பேட்டரிக்கு வந்து, 'இன்வெர்டர்' மூலம், மின் வினியோகம் செய்யப்படுகிறது.
சூரிய சக்தி மின் கட்டமைப்பு அருகில், வீட்டு உபயோக சாதனங்கள் இருக்கலாமா?
இருக்கலாம். மின் தகடுகளை தொட்டாலும், 'ஷாக்' அடிக்காது.சூரிய சக்தி கட்டமைப்பு அமைக்க, சி.எம்.டி.ஏ., மாசு கட்டுப்பாட்டு வாரியம் போன்ற அரசு நிறுவனங்களிடம் அனுமதி பெற வேண்டுமா?
வீடுகளில் அமைக்க, யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை.
மின் வாரியத்திற்கு, மின்சாரத்தை விற்க விரும்பினால், 'நெட்' மீட்டர் பொருத்த, மின் வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும்.

சூரிய சக்தி மின் நிலையங்களில், மின் உற்பத்தி இல்லாத போது, எந்த மின்சாரத்தை பயன்படுத்தலாம்?
பேட்டரியில் சேமிக்கப்பட்ட மின்சாரம் அல்லது, மின் வாரியத்தின் மின்சாரத்தை பயன்படுத்தலாம்.
மழையின் போது, சூரிய ஒளி இருப்பின், மின் உற்பத்தி நடக்குமா?
நடக்காது.
வீட்டு மேற்கூரையில் உள்ள ஓடுகள் மேல், சூரிய மின் தகடுகளை நிறுவ முடியுமா?
ஓடுகளின் எடையை பொறுத்து, சூரிய மின் தகடு நிறுவலாம்.
சூரிய மின் தகடுகளை, தரையில் பதிக்க முடியுமா?
பதிக்க முடியாது.
தமிழகத்தில், எத்தனை நிறுவனங்கள், சூரிய சக்தி மின் சாதனங்களை விற்பனை செய்கின்றன?
தமிழகத்தில், 600 நிறுவனங்கள், சூரிய மின் சக்தி சாதனங்களை விற்கின்றன. இதில், 10 - 15 பேர் மட்டும், அந்த சாதனங்களை உற்பத்தி செய்கின்றன. மற்றவர்கள், வெளி நாடுகளில் இருந்து, இறக்குமதி செய்து, சப்ளை செய்யும் டீலர்களாக உள்ளனர்.எந்த நாடுகளில் இருந்து, சூரிய மின் சக்தி சாதனம் இறக்குமதி செய்யப்படுகிறது?

சீனா, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, தைவான் ஆகிய நாடுகளில் இருந்து, இறக்குமதி செய்யப்படுகிறது. இதில், சீனாவின் பங்கு, 70 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
வெப்பத்தை விடஒளி தான் முக்கியம்!:கருப்பு நிறத்தில் இருக்கும் சூரிய மின் பலகையில், குண்டூசி நுனி அளவில், பல்லாயிரம், 'சோலார் செல்'கள் அல்லது, 'போட்டோவோல்டிக் செல்'கள் உள்ளன. இந்த செல்கள் சூரிய ஒளிக் கதிரில் உள்ள ஒளித்துகள்களான, 'போட்டான்'களை ஈர்க்கின்றன.
இந்த போட்டான்கள், சோலார் செல்களில் உள்ள அணுக்களை தாக்கும்போது, சிறு அளவு மின்சாரம் உற்பத்தியாகிறது. இப்படி பல்லாயிரம் செல்களைக் கொண்ட பெரிய சூரிய மின் பலகையிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை, ஒரு மின் கலனில் சேகரித்து, நமக்கு தேவைப்
படும்போது பயன்படுத்தலாம்.

சூரிய ஒளி மின் பலகைகள் பல தரத்தில் விற்கப்படுகின்றன. உயர் தரமான சூரிய மின் பலகை, மிகச் சிறு அளவு வெளிச்சம் இருந்தாலும், அதற்கேற்ப சிறு அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதற்கு, வெப்பத்தை விட வெளிச்சம் தான் முக்கியம். சில சூரிய மின் பலகைகள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கூட, மின்சாரத்தை சிறு அளவு உற்பத்தி செய்யும் அளவுக்கு, 'சென்சிடிவ்' ஆனவை!

நன்றி தினமலா். 

No comments:

Acceptance of Consumer Meter

  Acceptance of Consumer Meters - Details of retail outlet of the firm M/s. Holley Meters India LLP, Derabassi for sale of consumer meters o...