மதுரை: ஐகோர்ட் மதுரை கிளையில், சிவகங்கை பள்ளத்தூரை சேர்ந்த ரோகிணி என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: ‘‘எனது தந்தை மின்வாரியத்தில் கணக்கீட்டு ஆய்வாளராக பணியாற்றினார். பணியில் இருந்தபோது 19.4.2012ல் இறந்துவிட்டார். என் அப்பாவுக்கு நான் மட்டுமே வாரிசு. இதனால் கருணை அடிப்படையில் வேலை கேட்டு 23.2.2015ல் மின்வாரிய செயற்பொறியாளருக்கு விண்ணப்பித்தேன். உரிய காலத்தில் விண்ணப்பிக்கவில்லை எனவும், திருமணம் ஆகிவிட்டதால் வேலை வழங்க முடியாது எனவும் மார்ச் 9ல் என் மனுவை நிராகரித்து சிவகங்கை மேற்பார்வை பொறியாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்து எனக்கு வேலை வழங்க உத்தரவிட வேண்டும்’’. இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘‘கருணை அடிப்படையிலான வேலைக்கு ஆண்களையும், பெண்களையும் சமமாக பார்க்க வேண்டும். பிரித்து பார்க்க கூடாது. திருமணமாகி விட்டதால் வேலை வழங்க முடியாது என்ற அரசு தரப்பு வாதம் ஏற்புடையதல்ல. பெண்களுக்கு மட்டும் தனியாக விதிகளை நிர்ணயம் செய்வது தவறானது. பெண்களை வேறுபடுத்தும் வகையில் இருக்க கூடாது. எனவே, மனுதாரருக்கு 3 வாரத்திற்குள் வேலை வழங்க வேண்டும்,’’ என உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment