3000 கோடியை மிச்சப்படுத்திய வாரிய தலைவருக்கு மின் வாரிய ஊழியர்கள் பாராட்டி உள்ளனர்.

Dinamalar Banner Tamil Newsதமிழ்நாடு மின் வாரிய தலைவர் சாய்குமாரின் முயற்சியால், கடந்த, ஆறு மாதங்களாக, தனியார் மின் நிறுவனங்களிடம் இருந்து, அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவது நிறுத்தப்பட்டது. இதனால், ஒரு மாதத்திற்கு, 500 கோடி ரூபாய் என, ஆறு மாதத்திற்கு, 3,000 கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளது. இதற்கு, காரணமான ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாய்குமாரை, மின் வாரிய ஊழியர்கள் பாராட்டி உள்ளனர்.

தமிழ்நாடு மின்வாரியம், தனியார் நிறுவனங்களான, மதுரை பவர், 106 மெகாவாட்; லேன்கோ, 113.2; பயோனிர் பவர், 52.8; எஸ்.டி.சி.எம்.எஸ்., 250; ஜி.எம்.ஆர்., 196; சமல்பட்டி, 105.66; பிள்ளை பெருமாள் நல்லுார், 330.50 என, 1,154 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிறுவனங்களிடம், சந்தையில் எரிபொருள் விலைக்கு ஏற்ப, மின் கொள்முதல் விலையை நிர்ணயிக்கும் வகையில் ஒப்பந்தம் உள்ளது. அதன்படி, ஜி.எம்.ஆர்., மதுரை பவர், சமல்பட்டி, பிள்ளை பெருமாள் ஆகிய நிறுவனங்களிடம், ஒரு யூனிட் மின்சாரம் சராசரியாக, 12 ரூபாய்; எஸ்.டி.சி.எம்.எஸ்., ஐந்து ரூபாய்; மற்ற நிறுவனங்களிடம், நான்கு ரூபாய் என்ற விலையில், மின்சாரம் வாங்கப்படுகிறது.



நிறுவனங்களிடம் இருந்து, நாள்தோறும், சராசரியாக, 900 - 1,000 மெகாவாட் மின்சாரம் வாங்கப்பட்டது. குறிப்பாக, கோடை காலமான, மார்ச் முதல் ஜூலை வரை, ஜி.எம்.ஆர்., மதுரை பவர், சமல்பட்டி, பிள்ளை பெருமாள் ஆகிய நிறுவனங்களிடம் முழு அளவிற்கு மின்சாரம் வாங்கப்பட்டது. இதற்காக, மின்வாரிய அதிகாரிகள், ஒரு மாதத்திற்கு, 500 கோடி ரூபாய் செலவு செய்தனர். 

பொறுப்பேற்பு:இந்நிலையில், மின்வாரிய தலைவராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாய்குமார் கடந்த டிச., மாதம் பொறுப்பேற்றார். அவர், தனியாரிடம், அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதை நிறுத்தி, மின் வாரியத்தின் அனல், நீர், எரிவாயு மின் நிலையங்களில், முழு அளவிற்கு மின் உற்பத்தி செய்ய உத்தரவிட்டார். கடந்த பிப்., மாதம், ஜி.எம்.ஆர்., நிறுவனத்துடன், மின் கொள்முதல் ஒப்பந்தம் முடிவடைந்தது. இதுவரை, அந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. அத்துடன், பி.பி.என்., மதுரை பவர், சமல்பட்டி நிறுவனங்களிடம் இருந்தும், மின்சாரம் வாங்குவது, முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளது. 

இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கோடை காலத்தில், மின் தேவையை சமாளிக்க, அதிக விலைக்கு தனியாரிடம் மின்சாரம் வாங்கப்படும். தற்போது, மின் வாரியத்தின் அனல், நீர் மின் நிலையங்களில், அதிக உற்பத்தி செய்யப்படுவதால், தனியார் மின்சாரம் தேவைப்படவில்லை. ஜி.எம்.ஆர்., ஒப்பந்தம், 2014 பிப்., மாதத்துடன் முடிவடைந்தது. இதை, 2015, பிப்., வரை நீட்டிக்குமாறு, மின் வாரிய அதிகாரிகள், தமிழ்நாடு மின்சாரஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர். ஆணையமும், ஓராண்டிற்கு நீட்டித்தது.
இந்த அனுமதி, கடந்த பிப்., மாதத்துடன், முடிவடைந்தது. அதை மேலும் நீட்டிக்க புதிய தலைவர் சாய்குமார் விரும்பவில்லை. கடந்த, ஆறு மாதங்களில், பி.பி.என்., மதுரை பவர், சமல்பட்டி நிறுவனங்களிடம் இருந்து, ஆய்விற்காக, இரண்டு, மூன்று நாட்களுக்கு மட்டும், மின்சாரம் வாங்கப்பட்டது. 
அந்நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்கததால், ஒரு மாதத்திற்கு, 500 கோடி ரூபாய் என, ஆறு மாதங்களுக்கு, மின் வாரியத்திற்கு, 3,000 கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளது. இதற்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாய்குமார் தான் காரணம்.இவ்வாறு, அவர் கூறினார்.

மே 1ம் தேதி தனியார் நிறுவனங்களிடம் மின் கொள்முதல்
ஆண்டு - அளவு (மெகாவாட்டில்)
2010 - 810
2011 - 760
2012 - 500
2013 - 1,030
2014 - 1,120
2015 - 300 (இதில், பி.பி.என்., மதுரை பவர், சமல்பட்டி நிறுவனங்களிடம் இருந்து, ஒரு மெகாவாட் கூட வாங்கப்படவில்லை.)

மாயை தகர்ப்பு :

சென்னை, பேசின் பிரிட்ஜில், 196 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட ஜி.எம்.ஆர்., நிறுவனத்தின் மின் நிலையம் உள்ளது. இந்நிறுவனத்தின் மின்சாரம் இருந்தால் மட்டும் தான், சென்னையின் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்ற மாயை ஏற்படுத்தி, 15 ஆண்டுகளாக, மின்வாரிய அதிகாரிகள், மின்சாரம் வாங்கி உள்ளனர். ஆனால், தற்போது, அந்த மாயை தகர்க்கப்பட்டுள்ளது.

- dinamalar நிருபர் -

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click