500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மின்கட்டண உயர்வை அரசே ஏற்கும்: முதலமைச்சர் அறிவிப்பு

500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மின்கட்டண உயர்வை அரசே ஏற்கும்: முதலமைச்சர் அறிவிப்பு
500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மின்கட்டண உயர்வை அரசே ஏற்கும் என முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


2003 ஆம் ஆண்டைய மின்சார சட்டம் மற்றும் 2005 ஆம் ஆண்டைய மின் கட்டண ஒழுங்குமுறை ஆணைய விதிகளின்படி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான எரிபொருள் செலவு, தமிழ்நாடு மின்சார வாரியத்தால் பெறப்பட்டுள்ள கடன் மீதான வட்டித் தொகை மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மின் விகிதக் கட்டணம் மாறுதல் கேட்டு அதற்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சமர்ப்பிக்க வேண்டும்.


தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அவ்வாறு சமர்ப்பிக்கப்படாவிட்டால், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தன்னிச்சையாக மின் கட்டணம் நிர்ணயம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஒழுங்குமுறை ஆணைய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மின்சார மேல்முறையீட்டுத் தீர்ப்பாயமும் தனது 11.11.2011 நாளிட்ட தீர்ப்பில், மின் கட்டண நிர்ணயத்திற்கான மனுவினை ஒரு மாதத்திற்கு மேல் சமர்ப்பிக்காமல் இருந்தால், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையமே தன்னிச்சையாக மின் கட்டணங்களை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.


தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 23.9.2014 அன்று மின் நுகர்வோர்களுக்கான உத்தேச மின் கட்டணத்தை நிர்ணயித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன் பின்னர் பொது மக்கள் மற்றும் நுகர்வோரின் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தியது. 


தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று (11.12.2014) நுகர்வோர்களுக்கான மின் கட்டணங்களைத் திருத்தி அமைத்து ஆணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு, இரண்டு மாதங்களில் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர் எவருக்கும் எந்த வித கூடுதல் சுமையும் இல்லாத வகையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அதாவது இரண்டு மாதங்களில் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்கள் தற்போது அவர்கள் செலுத்தி வரும் மின் கட்டணத்தையே தொடர்ந்து செலுத்தினால் போதும். மின் கட்டணத்தில் எந்தவித உயர்வும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் செலுத்த வேண்டிய கூடுதல் மின் கட்டணத்தை தமிழக அரசே தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு செலுத்தி விடும். இதன் காரணமாக தமிழ்நாடு அரசுக்கு 825 கோடியே 90 லட்சம் ரூபாய் கூடுதல் நிதி சுமை ஏற்படும். இதனால் 1 கோடியே 61 லட்சத்து 21 ஆயிரம் வீட்டு மின் இணைப்பு நுகர்வோர் பயன்பெறுவர். வீட்டு மின் இணைப்பு நுகர்வோருக்கென இனி தமிழ்நாடு அரசு ஆண்டொன்றுக்கு 2,714 கோடியே 3 லட்சம் ரூபாய் மானியமாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கும். மொத்த வீட்டு மின் நுகர்வோர் ஆன 1 கோடியே 71 லட்சத்து 55 ஆயிரம் மின் நுகர்வோர்களில் 1 கோடியே 61 லட்சத்து 21 ஆயிரம் வீட்டு மின் நுகர்வோர், அதாவது 94 சதவீதம் வீட்டு மின் நுகர்வோருக்கு எந்தவித கட்டண உயர்வும் இருக்காது. 


சுமார் 11 லட்சத்து 83 ஆயிரம் குடிசை மின் இணைப்புகளுக்கு மின் கட்டணம் ஏதுமின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது. அது தொடர்ந்து வழங்கப்படும். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் குடிசை மின் இணைப்புகளுக்கு என உயர்த்தப்பட்ட கட்டணமான ஆண்டொன்றுக்கு 28 கோடியே 39 லட்சம் ரூபாயை அரசே கூடுதல் மானியமாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கும். இதன் காரணமாக குடிசை மின் இணைப்புகளுக்கென வழங்கப்படும் மானியம் ஆண்டொன்றுக்கு 224 கோடியே 54 லட்சம் ரூபாய் என உயரும். 


கைத்தறி நெசவாளர்களைப் பொறுத்தவரை, தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு கட்டணம் ஏதுமில்லாமல் மின்சாரம் வழங்கப்படுகிறது.  அதற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் கைத்தறி நெசவாளர்களுக்கு வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கான மின் கட்டண விகிதத்தில் மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த அடிப்படையிலேயே, தற்போதும் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.  இதன் காரணமாக, தமிழ்நாடு அரசு ஆண்டொன்றுக்கு 1 கோடியே 57 லட்சம் ரூபாய் கூடுதல் மானியமாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கும்.  எனவே, இனி ஆண்டொன்றுக்கு தமிழ்நாடு அரசு கைத்தறி நெசவாளர்களுக்கென 11 கோடியே 60 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கும்.  


இரண்டு மாதத்திற்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் விசைத்தறி மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் எதுவுமின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் செலுத்த வேண்டிய முழு மின் கட்டணத்தையும் அரசே ஏற்று வருகின்றது. இவர்களுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் தற்போது உயர்த்தப்பட்ட கட்டணத்தையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும். எனவே, இரண்டு மாதத்திற்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் விசைத்தறி மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் எதுவுமின்றி மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். இதனால் 69,000 விசைத்தறி மின் நுகர்வோர்கள் பயன்பெறுவர். இதற்கென தமிழக அரசு கூடுதலாக ஆண்டொன்றுக்கு 9 கோடியே 9 லட்சம் ரூபாய் மானியத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அளிக்கும். மேலும், இரண்டு மாதங்களில் 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தும் விசைத்தறி மின் நுகர்வோர்களுக்கு கூடுதலாக 17 கோடியே 25 லட்சம் ரூபாய் மானியத்தினை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அரசே அளிக்கும்.  இதன் காரணமாக 26 கோடியே 34 லட்சம் ரூபாய் கூடுதல் மானியமாக அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கும். இதனால் 1,30,000 விசைத்தறி மின் நுகர்வோர் பயன்பெறுவர். இதன் காரணமாக விசைத்தறி மின் நுகர்வோர்களுக்கென இனி ஆண்டொன்றுக்கு 264 கோடியே 72 லட்சம் ரூபாய் மானியமாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தமிழக அரசே அளிக்கும்.


விவசாயிகள் பயன்படுத்தும் விவசாய மின் இணைப்புகளுக்கு மின் கட்டணமின்றி மின்சாரத்தை வழங்கி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதிக்கும் மின் கட்டணத்தை அரசே ஏற்று தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மானியமாக வழங்கி வருகிறது. தற்போதும் விவசாய மின் இணைப்புகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை அரசே ஏற்று, விவசாயிகளுக்கு தொடர்ந்து மின் கட்டணம் ஏதுமின்றி மின்சாரம் வழங்கப்படும். இதனால் 20,47,000 விவசாயிகள் தொடர்ந்து மின் கட்டணம் ஏதுமின்றி மின்சாரம் பெறுவர். தற்போது விவசாயத்திற்கு மின் கட்டணமின்றி மின்சாரம் வழங்குவதற்கு தமிழக அரசு ஆண்டொன்றுக்கு வழங்கி வரும் 2 ஆயிரத்து 642 கோடியே 65 லட்சம் ரூபாய் மானியத்துடன் கூடுதலாக 426 கோடியே 99 லட்சம் ரூபாயை தமிழக அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கும். எனவே, விவசாய மின் இணைப்புகளுக்கென இனி ஆண்டொன்றுக்கு தமிழ்நாடு அரசு 3 ஆயிரத்து 69 கோடியே 64 லட்சம் ரூபாயை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கும்.


வழிபாட்டுத் தலங்களுக்கென தற்போது உயர்த்தப்பட்ட கட்டண விகிதங்களுக்கேற்ப கூடுதலாக ஒரு கோடியே 4 லட்சம் ரூபாயை தமிழ்நாடு அரசு மானியமாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கும்.  இதனால் வழிபாட்டுத் தலங்களுக்கென இனி ஆண்டொன்றுக்கு 10 கோடியே 79 லட்சம் ரூபாயை மானியமாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு வழங்கும்.


அதாவது, இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர் எந்த வித கூடுதல் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை. அதுபோன்றே, குடிசை மின் நுகர்வோரும் எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.  அதே போல், விவசாய மின் இணைப்பு பயன்படுத்தும் விவசாயிகள் மற்றும் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் விசைத்தறி மின் நுகர்வோர் ஆகியோருக்கு எந்த வித கட்டணமும் இன்றி மின்சாரம் தொடர்ந்து  வழங்கப்படும். இரண்டு மாதங்களுக்கு 100 யூனிட் வரை பயன்படுத்தும் கைத்தறி நெசவாளர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் கைத்தறி நெசவாளர்களுக்கு வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கு வழங்கப்படும் மின் கட்டண மானியம் தொடர்ந்து வழங்கப்படும். எனவே, 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் கைத்தறி நெசவாளர்களுக்கு எந்தவித கட்டண உயர்வும் இல்லை. 


தற்போது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ள மின் கட்டண உயர்விலிருந்து ஏழை, எளிய, நடுத்தரப் பிரிவு மக்களை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஆண்டொன்றுக்கு 1,310 கோடியே 23 லட்சம் ரூபாயை மின்சார வாரியத்திற்கு கூடுதல் மானியமாக வழங்கும். எனவே, இனி தமிழ்நாடு அரசு மின் கட்டண மானியமாக மின்சார வாரியத்திற்கு ஆண்டொன்றுக்கு 6 ஆயிரத்து 295 கோடியே 32 லட்சம் ரூபாய் வழங்கும். 


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click