தமிழகத்தில் அனைத்து மின் நுகர்வோருக்கும் நாளை முதல் 15 சதவிதம் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் மின் கட்டணங்களை மாற்றியமைப்பது தொடர்பான உத்தேச கட்டண விபரங்களை கடந்த செப்டம்பர் 23ம் தேதி வெளியிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த கட்டண மாற்றம் குறித்து, சென்னை, திருநெல்வேலி, ஈரோடு நகரங்களில் கடந்த அக்டோபர் மாதம் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு, மின் கட்டணம் 12ம் தேதி முதல் அதாவது நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து நுகர்வோர் வகையினருக்கும் 15 சதவீத அளவிற்கு மின் கட்டண உயர்வு இருக்கும் என்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும், நுகர்வோரை பாதிக்காத வகையில் மானியம் வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது.
முதல்வர் அறிவிப்பு
இதையடுத்து, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிவிப்பில், ''2 மாதத்திற்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகள் கூடுதல் கடடணம் செலுத்த தேவையில்லை. இதனால், ஒரு கோடியே 61 லட்சத்து 21 ஆயிரம் வீட்டு மின் நுகர்வோர் பயன்பெறுவர்.
அதேபோல், கைத்தறி நெசவாளர்களுக்கு முதல் 100 யூனிட் வரை வழக்கம் போல் மின் கட்டணம் கிடையாது. 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் வீட்டுக்கான மின்கட்டணமே வசூலிக்கப்படும். மேலும், 11.83 லட்சம் குடிசை வீடுகளின் மின் இணைப்புகளுக்கும் கட்டணம் இன்றி தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படும்'' எனக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment