மின் தடை குறித்து நுகர்வோர்களுக்கு எஸ்.எம்.எஸ்.

மின் தடை குறித்து நுகர்வோர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கும் திட்டத்தை மின் வாரியம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 110 நகரங்களில் இந்தத் திட்டம் முதல் கட்டமாக அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் மறுசீரமைக்கப்பட்ட விரைவான மின் மேம்பாடு, சீரமைப்புத் திட்டத்தின் (ஆர்-ஏபிடிஆர்பி) கீழ் தமிழகத்தில் உள்ள 110 நகரங்களில் மின் விநியோக அமைப்புகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக மின் தடை தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியது:
அறிவிக்கப்பட்ட மின் தடைகள் தொடர்பாகவும், திடீரென மின் தடை ஏற்பட்டால் அது தொடர்பாகவும் நுகர்வோருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும். எந்தெந்தப் பகுதிகளில் மின் தடை உள்ளது, எப்போது இந்த மின் தடை நீங்கும் என்பன உள்ளிட்ட தகவல்களையும் அந்த எஸ்.எம்.எஸ்.ஸில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த எஸ்.எம்.எஸ். தகவல் வழங்குவதற்காக புதிய சாஃப்ட்வேர் உருவாக்கப்பட்டு வருகிறது. சாஃப்ட்வேர் உருவாக்கப்பட்டதும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்தச் சேவை வழங்குவதற்காக பகுதி வாரியாக மின் விநியோக அமைப்பு தொடர்பான தகவல்கள் தொகுக்கப்பட்டு, இந்தத் தகவல்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். அதன் மூலம், எந்தப் பகுதியில் மின் விநியோகம் தடைபட்டாலும் கணினி மூலமாக நுகர்வோருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சேவை முதல் கட்டமாக 110 நகரங்களுக்கும், அதன் பிறகு, தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
மின் நுகர்வோர்களுக்கு ஏற்கெனவே மின் கட்டணம் தொடர்பாக எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் வழங்கப்படுகிறது. இந்த எஸ்.எம்.எஸ். சேவைக்கு 1.8 கோடி நுகர்வோர் பதிவு செய்துள்ளனர். மின் கட்டண விவரம், அதைச் செலுத்துவதற்கான கடைசி தேதி ஆகிய விவரங்கள் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படுகின்றன.
இந்த எஸ்.எம்.எஸ். சேவைக்குப் பிறகு, சென்னை வட்டத்தில் கடைசித் தேதிக்குப் பிறகு மின் கட்டணம் செலுத்தும் சராசரி நுகர்வோரின் எண்ணிக்கை 3 முதல் 5 சதவீதம் வரை குறைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tanks to dinamani

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click