மின்சார சிக்கனம் தேவை இக்கனம்

மின்வெட்டு பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.திருப்பூர் பகுதியில் அதிகப்படியான தொழிற்சாலைகள், பனியன் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. திருப்பர் மின்பகிர்மான வட்டத்தில் மட்டும் 400 உயரழுத்த மின் இணைப்புகள், 54 ஆயிரம் தாழ்வழுத்த வணிக மின் இணைப்புகள் உள்ளன. மற்ற வட்டங்களை காட்டிலும், கூடுதல் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் வாரமின் விடுமுறை அமலான பிறகு, குடியிருப்புகளுக்கான மின்வெட்டு சற்று குறைந்துள்ளது. ஆனால், திருப்பூர் பகுதியில் மின்பயன்பாடு அதிகமாக இருப்பதால், மின்வெட்டு பிரச்னை தொடர்ந்து நீடித்து வருகிறது. கோவில் விழாக்கள், அரசியல் கட்சி பொதுக்கூட்டங்களுக்காக மின்சாரம் திருடப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். மேலும், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தினால் தட்டுப்பாட்டை குறைக்க இயலும்.மாநகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், கலெக்டர் அலுவலகம் என பல்வேறு அரசு அலுவலகங்களில் மின்விசிறிகள் தொடர்ந்து இயக்குகின்றனர். அலுவலர்கள், இருக்கையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மின்விசிறிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் ஜன்னல்களை மூடி வைத்துக்கொள்வதால், பகல் நேரத்திலும் மின் விளக்குகள் ஒளிர வேண்டியுள்ளது.போதுமான ற்றோற்றத்துக்காக அதிக எண்ணிக்கையிலான ஜன்னல்கள் வைக்கப்பட்டிருந்தாலும், ஜன்னல்களை இழுத்து மூடிவிட்டு "ஏசி' பயன்படுத்தப்படுகிறது. மாநகராட்சி பகுதிகளில் அதிக அளவு மின் விளக்குகள் இரவு நேரங்களில் எரிகின்றன. நள்ளிரவு நேரத்துக்குபின், உயர்மின் கோபுர விளக்கு உள்ளிட்ட அதிக மின்சாரத்தை பயன்படுத்தும் விளக்குகள் பயன்பாட்டை கட்டுப்படுத்தலாம்.மேலும், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில், அதிக மின்சாரத்தை செலவழிக்கும் வண்ண ஒளிர்விளக்குகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். ஒரே பகுதியில் பல விளக்குகள் எரிவதற்கும், விளம்பர பலகைகளுக்கு வண்ண விளக்குகள் பயன்படுத்துவதற்கும் கட்டுப்பாடு விதிக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

No comments: