உடுமலை வாரம் தோறும் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: மின்வாரியம் தகவல்

உடுமலை மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட கோட்ட அலுவலகங்களில் வாரம் தோறும் புதன்கிழமைகளில் நுகர்வோர் குறை தீர் கூட்டம் நடக்கிறது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடுமலை மின் பகிர்மான வட்டத்தில், தாராபுரம், பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சி, உடுமலை ஆகிய கோட்டங்கள் உள்ளன. கோட்ட அலுவலகங்களில் நுகர்வோர் குறை தீர் கூட்டம் முறையாக நடத்தப்படுவதில்லை என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இது குறித்து உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: 
உடுமலை மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட கோட்ட அலுவலகங்களில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் நுகர்வோர் குறை தீர் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடத்தப்படுகிறது.
இது குறித்த தகவல்கள் நுகர்வோர்கள் அறிந்து கொள்ளும் வகையில், சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகங்களின் தகவல் பலகையில் அறிவிப்பு செய்யப்படுகிறது. இக்கூட்டங்களில் நுகர்வோர் அளிக்கும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாவட்ட கலெக்டரிடமிருந்து பெறப்படும் பொதுமக்கள் குறை தீர் கூட்ட மனுக்கள் மற்றும் விவசாய குறை தீர் கூட்டங்களில் பெறப்படும் மனுக்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே நுகர்வோர் சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகத்தில் நடக்கும் குறைதீர் கூட்டங்களை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலை கோட்டத்திற்குட்பட்ட குறை தீர் கூட்டம் நேற்று கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், சீரான மும்முனை மின்சாரம், பழுது சரிபார்ப்பதில் காலதாமதம் உட்பட பல்வேறு புகார் மனுக்களை விவசாயிகள் அளித்தனர்.
முகாமில், மேற்பார்வை பொறியாளர் மனோகரன் மற்றும் அதிகாரிகள் புகார் மனுக்களை பெற்றனர்.

No comments: