அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஆண்டு ஊதிய உயர்வு: தமிழக அரசு புதிய உத்தரவு



             ஆண்டு ஊதிய உயர்வு பெறத் தகுதியான நாளுக்கு முந்தைய தினம் ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கு அந்த ஊதிய உயர்வை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

             தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அவர்கள் பணியில் இணைந்த நாளைக் கணக்கிட்டு, ஆண்டு ஊதிய உயர்வு 3 சதவீதம் அளவுக்கு (அடிப்படை ஊதியம்- தர ஊதியம் ஆகியவற்றை கணக்கிட்டு) அளிக்கப்படுகிறது. ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 என நான்கு காலாண்டுகளாகப் பிரிக்கப்பட்டு இந்த ஊதிய உயர்வு கொடுக்கப்படுகிறது.
இந்த நிலையில், அரசு ஊழியர்கள் அல்லது ஆசிரியர்கள் தங்களது பணியை டிசம்பர் 31, மார்ச் 31, ஜூன் 30, செப்டம்பர் 30 ஆகிய தேதிகளில் ஓய்வு பெற்றால் அவர்களுக்கான அந்த ஆண்டுக்கான ஊதிய உயர்வு அளிக்கப்படாமல் இருந்தது. அவர்கள் ஊதிய உயர்வை பெறாமலேயே ஓய்வு பெற்று வந்தனர்.
இந்த உத்தரவை மாற்றி ஊதிய உயர்வு பெறத் தகுதியான நாளுக்கு முந்தைய நாள் ஓய்வு பெற்றிருந்தாலும் அவர்களுக்கு அந்த ஆண்டுக்கான ஊதிய உயர்வை அளிக்க வேண்டுமென தலைமைச் செயலக சங்கம் போன்ற ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.

சம்பள குறைதீர் பிரிவிடம் மனு: ஆண்டு ஊதிய உயர்வு விவகாரம் தொடர்பாக, தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சம்பள குறைதீர் பிரிவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த குறைதீர் பிரிவு, ஊதிய உயர்வு பெறத் தகுதியான நாளுக்கு முந்தைய தினம் ஓய்வு பெற்றாலும் அந்த ஆண்டுக்கான ஊதிய உயர்வை அளிக்க வேண்டும் என அரசுக்குப் பரிந்துரை செய்தது.
இந்தப் பரிந்துரையை ஏற்று தமிழக நிதித் துறை செயலாளர் க.சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தரவு வெளியான நாளில் இருந்து (டிச.31) அது நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவு மூலமாக, ஆயிரக்கணக்கான ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பயன் கிடைக்கும் எனவும், அவர்கள் பெறும் ஓய்வூதியத்தில் கூடுதலான தொகையைப் பெற வாய்ப்பு இருப்பதாகவும் நிதித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click