தந்தை இறந்தபோது மைனராக இருந்தவருக்கு மேஜரானதும் அரசு பணி மின் வாரியத்துக்கு ஐகோர்ட் உத்தரவு


சென்னை, : கருணை அடிப்படையில் பணி கேட்டவருக்கு 12 வாரத்துக்குள் பணி வழங்குமாறு மின்சார வாரியத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சங்கர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

எனது தந்தை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வயர்மேனாக பணியாற்றி வந்தார். கடந்த 1992 அக்டோபரில் 28ல் எனது தந்தை இறந்தார். எனக்கு அப்போது 14வயது. எனது தந்தை இறந்தவுடன் தனது கணவரின் பணியை எனக்கு வழங்கக்கோரி எனது தாய் மின்சார வாரியத்துக்கு வேண்டுகோள் மனு கொடுத்தார். ஆனால், எனக்கு வயது இல்லை என்பதால் எனது தாயின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. கடந்த 1999ல் எனக்கு பணிக்கான வயது வந்தவுடன் மீண்டும் மின்சார வாரியத்திடம் கருணை அடிப்படையில் வேலை கேட்டு மனு கொடுத்தோம். ஆனால், எனது மனுவும் நிராகரிக்கப்பட்டது. மீண்டும் 2007ல் மனு கொடுத்தேன். அந்த மனுவைப் பரிசீலித்த மின்சார வாரியம் எனது தந்தை இறந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பம் செய்யவில்லை என்று கூறி எனது மனுவை நிராகரித்தது. எனவே, எனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 



இந்த மனு நீதிபதி அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:
 தந்தை இறக்கும்போது உரிய வயது வராமலிருந்த வாரிசுகள், தந்தை இறந்து 3 ஆண்டுகளுக்குள் கருணை அடிப்படையில் பணி கேட்டு மனு செய்தி ருந்து அந்த மனு நிராகரிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உரிய வயது வந்தால் பணி வழங்கலாம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த 2011 நவம்பரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. 
ஆகஸ்ட் 2005க்கு முன்பு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு வேலை தருவது குறித்து மறு ஆய்வு செய்யலாம் என்றும் அதில் கூறப்பட்டது. எனவே, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு 12 வாரங்களுக்குள் கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Acceptance of Consumer Meter

  Acceptance of Consumer Meters - Details of retail outlet of the firm M/s. Holley Meters India LLP, Derabassi for sale of consumer meters o...