புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள குறைகள் நீக்கப்படும்

புதுடில்லி: மத்திய அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள, சில குறைபாடுகளை சரி செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என, ஓய்வு நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் யோகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். புதிய ஓய்வூதிய திட்டம், தனியார் துறைக்கு விரிவுபடுத்தப்பட்ட போது, தற்போது கண்டுபிடித்த ஒரு சில அம்சங்களை மாற்றத் தவறி விட்டோம். அதை சரி செய்து, இத்திட்டத்தை செம்மைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


தற்போது, 350 நிறுவனங்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து உள்ளன. இது மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும், இந்தியாவின் அளவுடன் ஒப்பிடுகையில் இது மிக மிக குறைவு.ஓய்வூதிய திட்டத்தை நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு, 0.0009 சதவீதம் தான், நிதி நிர்வகிப்பு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வந்தது. இதை உயர்த்தும் நோக்கில், திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.கட்டமைப்பு வசதி இதன் மூலம், இந்நிறுவனங்கள் அவற்றின் சந்தைப்படுத்துதல் மற்றும் வினியோக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
இது போன்ற நடவடிக்கைகள் மூலம், நாட்டின் மிகச் சிறந்த ஓய்வூதிய திட்டம் என்ற சிறப்பினை பெறும். இவ்வாறு அகர்வால் தெரிவித்தார். கடந்த 2004ம் ஆண்டு முதல், மத்திய அரசு பணியில் சேருவோர், புதிய ஓய்வூதி திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 2009ம் ஆண்டு, மே 1ம் தேதி முதல், அனைத்து மக்களுக்கும், இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.சென்ற 2011ம் ஆண்டு டிசம்பர் நிலவரப்படி, இத்திட்டத்தின் கீழ், அரசு பணியாளர்களின், ஓய்வூதிய தொகை, 12,769 கோடி ரூபாய் அளவில் உள்ளது. இத்திட்டத்திற்கு, அரசு பணியாளர்களின் மாதாந்திர பங்களிப்பு, 500 கோடி ரூபாயாக உள்ளது

No comments: