தமிழகத்துக்கு மின்சாரம் அனுப்ப வசதி கிடையாது: கையை விரித்தேவிட்டது மத்திய அரசு!


டெல்லி: தமிழக அரசு கோருவது போல் டெல்லி மாநில அரசு ஒப்படைக்கும் மின்சாரத்தை தர இயலாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதே பதிலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மத்திய மின் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவும் கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
டெல்லி மாநில அரசானது 1721 மெகாவாட் மின்சாரத்தை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைக்கிறது. இந்த திரும்ப ஒப்படைக்கும் மின்சாரத்தை மின்பற்றாக்குறையில் இருக்கும் தமிழகத்துக்கு கொடுக்க வேண்டும் என்பது தமிழக அரசின் கோரிக்கை. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த 7,8 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச், மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய இன்றுவரை கால அவகாசம் கொடுத்து உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொது மத்திய மின்சார ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தென் மத்திய மின் தொகுப்பு வழியாக தமிழகத்துக்கு மின்சாரம் கொண்டு செல்ல போதுமான கட்டமைப்பு இல்லை. இதனால் மின்சாரத்தை வழங்க இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய மின்சார ஆணையத்தின் அறிக்கை மீதான பதிலை தமிழக அரசு அளிக்க நீதிபதிகள் கால அவகாசம் அளித்து விசாரணையை டிசம்பர் 5-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மக்களவையில் மின்சார விவகாரம்

இதனிடையே மக்களவையில் தமிழக மின்பற்றாக்குறை பற்றி பேசிய அ.தி.மு.க. எம்.பி. செம்மலை, டெல்லி ஒப்படைக்கும் உபரி மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்கக் கோரினார்.
இதற்குப் பதிலளித்த மத்திய மின்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, தமிழக மின்பற்றாக்குறை குறித்து நான் அறிவேன். ஆனால் டெல்லி திருப்பிக் கொடுத்த உபரி மின்சாரத்தை அனுப்ப போதுமான வசதிகள் இல்லை என்பதால் சிக்கல் நீடிக்கிறது. மாநிலங்களுக்கு உதவி செய்ய தயாராக இருந்தாலும் தங்களது மின் தட்டுப்பாட்டை போக்க வேண்டியது மாநிலங்களின் கடமைதான் என்றார்.

No comments: