வட சென்னை அனல் மின் நிலைய திட்டத்திற்கு ஒப்புதல் தாருங்கள்:பிரதமருக்கு ஜெ., கடிதம்


:வடசென்னை அனல் மின் திட்டத்தின் இரண்டாம் பிரிவிற்கு, சுற்றுச்சூழல் ஒப்புதலை விரைவில் வழங்க, உத்தரவிட வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.இதுகுறித்து, அவர் எழுதியுள்ள கடித விவரம்:தமிழகம் தற்போது கடுமையான மின் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. மின் பற்றாக்குறையை போக்க, மாநிலத்தில் ஏற்கனவே உள்ள மின் உற்பத்தி நிலையங்களில், 4,000 மெகாவாட் அளவு கூடுதல் மின் திறனை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


ஒப்புதலில் தாமதம்:வடசென்னை அனல் மின் நிலைய இரண்டாம் பிரிவில், 600 மெகாவாட் திறனில் இரண்டு அலகுகள், 5,813 கோடி ரூபாயில், தயாராகி வருகிறது. இவற்றை, அடுத்த மாதம் மற்றும் அடுத்தாண்டு பிப்ரவரி மாதங்களில், மின் கட்டமைப்பில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.ஆனால்,மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, இத்திட்டத்திற்கு வழங்க வேண்டிய, சுற்றுச்சூழல் ஒப்புதல், கடந்த ஆறு ஆண்டுகளாக வழங்கப்படாததால், திட்டம் தள்ளிப் போகிறது.பல்வேறு காரணங்களால், வீடியோகான் நிறுவனத்தால், அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை. இதனால், தமிழக அரசு, அந்த திட்டத்தை,தமிழ்நாடு மின்வாரியம் தற்போதைய மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) மூலம், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் செயல்படுத்த முடிவெடுத்தது.
இந்நிலையில், கடந்த 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம், திட்டத்தை பார்வையிட்ட, மத்திய சுற்றுச்சூழல் துறையினர், வீடியோகான் நிறுவனம் வாங்கிய, சுற்றுச்சூழல் ஒப்புதலை, தமிழ்நாடு மின்வாரியத்திற்கு மாற்றிக் கொள்ளலாம் என்றனர்.அதே நேரத்தில், வடசென்னை திட்டத்தின், மின் நிறுவு திறன், 525ல் இருந்து, 600 மெகாவாட்டாக,இரு அலகுகளுக்கும் உயர்த்தப்பட்டது. சுற்றுச்சூழல் துறையின், மதிப்பீட்டு நிபுணர் குழுவும், மின் நிறுவு திறன் உயர்வு குறித்து, மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு பரிந்துரைத்தது.ஆகவே,இரண்டு அலகுகளுக்கும், 600 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டது தொடர்பான, சர்ச்சைகள்நிபுணர் குழு கூட்டத்தில் நீங்கிவிட்டது.
புதிய விண்ணப்பம்: ஆனால், ஆறு ஆண்டுகள் கழித்து, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தமிழக தலைமைச் செயலருக்கு, இம்மாதம் 16ம் தேதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், வடசென்னை அனல் மின் திட்டத்திற்கு, சுற்றுச்சூழல் ஒப்புதலைப் பெற, டான்ஜெட்கோ மூலம் புதிய விண்ணப்பம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.வடசென்னை திட்டத்தில், ஒப்புதல் காலத்திற்குள் திட்டப்பணிகள் துவக்கப்பட்டுள்ளது குறித்து, மத்திய வனத்துறையின் தலைமை வனப்பாதுகாவலர் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், வீடியோ கான் நிறுவனத்திடம் இருந்து, தடையில்லா சான்றும் வழங்கப்பட்டுள்ளது. 
அதன் அடிப்படையில், சுற்றுச்சூழல் ஒப்புதலும், தமிழக மின்வாரியத்திற்கு மாற்றப்பட்டு விட்டது. எனவே, இங்கு தடையில்லா சான்றிதழும் தேவையில்லை. தற்போது, திட்டம் உற்பத்தியை துவங்கஉள்ள நிலையில், புதிய விண்ணப்பம் அளிக்க வேண்டும் என்பது ஏற்க முடியாதது.தற்போது,தேவையற்ற காலதாமதம் ஏற்படுத்துவதன் மூலம், இத்திட்டத்திற்கு, மகாநதி நிலக்கரி நிறுவனம், நிலக்கரி அளிப்பதாக உறுதியளித்து அளித்த கடிதத்தை ரத்து செய்வதற்கு வழிவகுத்துள்ளது.எனவே, இந்த விஷயத்தில் தலையிட்டு, புதிய விண்ணப்பம் கேட்காமல், உடனடியாக இத்திட்டத்திற்கு, சுற்றுச்சூழல் ஒப்புதல் வழங்க, மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு உத்தரவு வழங்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார். 

No comments: