விரைவில் ஸ்மார்ட் மின் மீட்டர் வசதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக சட்டசபையில் அமைச்சர் பி.தங்கமணி கூறினார். - தினதந்தி செய்தி

சென்னை, 

தமிழக சட்டசபையில் நேற்று எரிசக்தித் துறை, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். இறுதியாக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து மின்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு மாநிலம் வளர சட்டம்-ஒழுங்கு, மனிதவளம், மின்சாரம் ஆகிய மூன்றும் இன்றியமையாதது. இது மூன்றும் உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 12 மணி நேர மின்வெட்டு இருந்தது. அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் 15,410 மெகாவாட் மின்சார உற்பத்தியை புதிதாக கொண்டு வந்திருக்கிறோம்.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு தடையில்லா மின்சாரம் வேண்டும். இப்போது ஒரு நிமிடம் கூட மின்வெட்டு இல்லை. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மின்மிகை மாநிலம் என்று கூறியதை இன்றளவும் காத்து வருகிறோம். தமிழகத்தில் இப்போது 3 கோடியே 3 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. தடையில்லா மின்சாரம் கொடுக்கப்பட்டு வருவதால், ஆந்திராவில் உள்ள கியா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழகத்திற்கு சென்றுவிடலாமா? என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த 3 ஆண்டுகளில் 6,220 மெகாவாட் மின்சாரமும், அடுத்த 5 ஆண்டுகளில் 13,110 மெகாவாட் மின்சாரமும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மின்தேவை திருப்திகரமாக இருப்பதால் மின்வெட்டே இருக்காது. கடந்த 3 ஆண்டுகளில் புதிதாக 340 துணை மின்நிலையங்களை அமைத்துள்ளோம். காற்றாலை மின்சாரம் என்பது ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை கிடைக்கிறது. அதிகமாக 5 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு கிடைக்கிறது. ஆனால், திடீரென்று 1,000 மெகாவாட் மின்சார உற்பத்தி குறைந்துவிடுகிறது. இதை ஈடுசெய்ய அனல்மின் நிலையங்களைத்தான் நாட வேண்டியுள்ளது.

மத்திய தொகுப்பில் இருந்து 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தர வேண்டும். ஆனால், 4 ஆயிரம் மெகாவாட் அளவுக் குத்தான் மின்சாரத்தை தருகிறார்கள். இதனால், மீதமுள்ள 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை நாம் காசு கொடுத்து வெளியே இருந்து வாங்க வேண்டியுள்ளது. அதனால், மின்துறைக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது.

கடந்த 4 ஆண்டுகளில் தட்கல் திட்டத்தின் மூலம் 27 ஆயிரம் மின் இணைப்புகளும், இயல்பாக 60 ஆயிரம் மின் இணைப்புகளும் என மொத்தம் 87 ஆயிரம் மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங் கப்பட்டுள்ளன. சென்னை தியாகராயநகர் பகுதியில் விரைவில் ஸ்மார்ட் மின் மீட்டர் வசதி செய்யப்பட உள்ளது. இதற்காக உள்ளாட்சி துறை நிதி ஒதுக்கியுள்ளது. இதனால், அலுவலகத்தில் இருந்தே வீட்டின் மின் அளவீட்டை கணக்கிட முடியும். பணம் கட்டாத பட்சத்தில் மின்சாரத்தை துண்டிக்கவும் முடியும். மின் துறைக்காக கடந்த 9 ஆண்டுகளில் ரூ.77 ஆயிரம் கோடி முதலீட்டு கடனாக வாங்கப்பட்டுள்ளது.

No comments: