நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின்னுற்பத்தி குறித்த அருங்காட்சியகம்: மாணவர்கள் பார்வையிட அழைப்பு
தென்னகத்தின் தண்ணீர்த் தொட்டி என்று அழைக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் வருகையின்போது சிறிய அளவில் முதல் முதலாக நீர் மின் உற்பத்தியைத் தொடங்கினர். இங்கு உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம், தமிழகத்தின் ஈரோடு, கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டுமல்லாது அப்போதைய திருவாங்கூர் மாகாணம் தற்போதைய கேரள மாநிலம், மைசூர் உடுப்பி உள்ளிட்ட பகுதிகள் வரை மின் விநியோகம் செய்யப்பட்டது.
சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக காமராஜர் நீலகிரியில் உற்பத்தியாகும் ஆறுகளின் குறுக்கே பல கோடி மதிப்பில் பல அணைகளை கட்டினார். பைக்காரா, அவலாஞ்சி, அப்பர் பவானி, கெத்தை, குந்தா, சிங்காரா உள்ளிட்ட இடங்களில் கனடா மற்றும் ரஷ்ய நாட்டுத் தாெழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மிகப் பெறும் நீர் மின்நிலைய திட்டங்களுக்கு அஸ்திவாரமிட்டார். நாட்டுக்குப் பெரும் பயன்தரக் கூடிய இத்திட்டத்தை சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நேரில் வந்து அடிக்கல்நாட்டி திட்டங்களைத் தொடங்கிவைத்தார். போதிய இயந்திர வசதியோ நவீன கருவிகளோ இல்லாத சூழலிலேயே மலைக்க வைக்கக்கூடிய மாபெரும் திட்டத்தை சுமார் 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விடுப்பின்றி வேலை செய்து சுமார் மூன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றினர். இத்திட்டத்தால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர் மின் நிலையங்கள் மூலம் தமிழகத்துக்குத் தேவையான 833.60 மெகவாட் மின்சாரம், மிக குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்பட்டு, விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், ஆங்கிலேயர் காலம் முதல் பல்வேறு பரிணாமங்களில் படிப்படியாக வளர்ச்சியடைந்த நீர் மின் நிலைய செயல்பாடுகளையும் மற்றும் உற்பத்தி விவரத்தைப் பொதுமக்கள் மற்றும் தொழில் நுட்ப மாணவர்கள் தெரிந்துகாெள்ளும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு மின்சார வாரியம் திட்டமிட்டது. அதன்படி, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து சுமார் 30 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள குந்தா மின்வாரிய அலுவலக வளாகத்தில் சமீபத்தில் நீர் மின் உற்பத்தி மற்றும் செயல்பாடு குறித்த வரலாற்று அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
அருங்காட்சியகத்தில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் மின் நிலையங்களின் அடிக்கல் நாட்டு விழா, கட்டுமானப் பணிகளை ஜவகர்லால் நேரு, காமராஜர், கக்கன், மொராஜிதேசாய் உள்ளிட்ட தலைவர்கள் ஆய்வு மேற்காெண்டது உள்ளிட்டவை அடங்கிய வரலாற்றுப் புகைப்படத் தொகுப்புகளும், 600க்கும் அதிகமான மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்துக்கு பழங்காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வந்த கருவிகள் மற்றும் உதிரிபாகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த அருங்காட்சியகம் இருபதாம் நுாற்றாண்டின் இரண்டாம் பாதிவரை நீலகிரி மாவட்டத்தின் பங்களிப்பையும் விளக்கும் வகையில் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள பல்வேறு வகையான நீர் வழி மின்சார திட்டங்களின் வரலாற்றை விவரிக்கும் விதமாக உள்ள அருங்காட்சியகம், தொழில் நுட்பக் கல்லுாரி மாணவர்களுக்குத் தேவையான ஆவணங்கள் அடங்கியுள்ள மையமாகவும் விளங்குகிறது. இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிடுவதன் மூலம் மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பழங்கால அணைக்கட்டும் முறை, பராமரிப்பு உள்ளிட்டவற்றை எளிதில் தெரிந்துகொள்ளலாம். சிங்காரா முதல் கெத்தை வரை உள்ள நீர் மின் நிலையங்களில் பயன்பாட்டில் இல்லாத பொருள்களைச் சேகரித்து அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
அருங்காட்சியகம் குறித்து குந்தா நீர் மின்உற்பத்தி நிலைய தலைமைச் செயற்பொறியாளர் ரகு கூறுகையில், ``தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முதல் தலைவரான வி.பி.அப்பாதுரை முதலியார், கனடாவில் நிபுணத்துவம் பெற்று தமிழகம் மற்றும் இந்தியாவுக்கு நீர் மின் உற்பத்தியை அறிமுகப்படுத்தினார். மேலும் அருங்காட்சியகத்தில் அவர் நீர் மின் நிலையங்கள் குறித்து கனடாவில் இருந்துகாெண்டு வந்த 5 தொகுப்புகள் அடங்கிய புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, அப்பர் பவானி மற்றும் எமரால்டு அணைகளின் கட்டுமானப் பணிகள் குறித்து படிப்படியான புகைப்பட தொகுப்பு பிரம்மிப்பூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தாெழில்நுட்பம் குறித்து தெரிந்து காெள்ள ஆர்வமுள்ளவர்கள், பாெறியியல் மாணவர்கள் எங்களிடம் அனுமதிபெற்று இலவசமாக பார்வையிடலாம்’’என்றார்.
No comments:
Post a Comment