களப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு மின்வாரியத்தில் போர்மேன்கள், உதவியாளர்கள், வயர்மேன்கள், மின்வழித்தட ஆய்வாளர்கள், வணிக ஆய்வாளர்கள் ஆகிய களப்பணியாளர்கள் 30,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இதுதவிர, உதவி பொறியாளர்கள், ஜூனியர் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளனர். மாநிலத்துக்கே வெளிச்சம் கொடுக்கும் பணி என்பதால், மின்வாரியத்துக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இருப்பினும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் முறைகேடு மற்றும் சரியான திட்டமிடல் இல்லாததால் வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. சமீபத்தில் கூட, நிலக்கரி இறக்குமதியில் ஏற்பட்ட குளறுபடியால் வாரியத்துக்கு 740 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை துறை தெரிவித்தது. அதேபோல் மின்கொள்முதல், திட்டங்களை தாமதப்படுத்துதல் என அதிகாரிகள் மட்டத்தில் பல முறைகேடுகள் நடக்கிறது. அதேசமயம், கீழ்மட்ட அளவிலும் வாரியத்தில் லஞ்சம் தலைதூக்கியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. அதாவது, புதிய மின் இணைப்பு பெறுதல், வயரில் ஏற்பட்ட பிரச்னையால் மின்சாரம் தடைபடுதல், மீட்டர் பிரச்னை என பல அடிப்படை பிரச்னைகளுக்கு போர்மேன், வயர்மேன் உள்ளிட்ட களப்பணியாளர்களைதான் பொதுமக்கள் நாடுகின்றனர்.
சொந்த ஊரில் பணிபுரிவதால், களப்பணியாளர்கள் பலர் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சிபாரிசு அடிப்படையில் பணிகளை முடித்துக் கொடுப்பதாகவும், அதனால் வாரியத்துக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. உதாரணமாக, வீட்டில் மின் மீட்டர் தற்போதுள்ள இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றால் 500 முதல் 1000 வரை கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் பலர், தங்களுக்கு நன்கு பழக்கம் உள்ள வயர்மேன்களை சிபாரிசு பிடித்து கட்டணம் செலுத்தாமலேயே, தனியார் எலக்ட்ரீசியன்கள் மூலம் மீட்டரை இடமாற்றம் செய்கின்றனர். இதுபோன்ற பல பணிகளில் களப்பணியாளர்கள் விதிமீறல் செய்வதாக மின்வாரியத்தின் தலைமை அலுவலகத்துக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், கீழ்மட்ட அளவில் நடக்கும் லஞ்சத்தை ஒழிக்கும் வகையில் 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் களப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய மின்வாரியம் அதிரடியாக முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பல ஆண்டுக்குப் பின், வாரியத்தின் நஷ்டம் தற்போது 4,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் வாரியத்தை லாபத்தில் இயக்க முடியும். எனவேதான், பொறியாளர்களை நேர்முக தேர்வின்றி எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுப்பது, 3 ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் பொறியாளர்களுக்கு ஆன்லைனில் இடமாறுதல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன. அதிகாரிகளை தொடர்ந்து, கீழ்மட்ட அளவில் முறைகேடுகளை தவிர்த்து மக்களுக்கு வாரியத்தின் மேல் நம்பிக்கை ஏற்படும் வகையில் பல மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளோம். அதன்படி, 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் களப்பணியாளர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள். முதல்கட்டமாக நடந்த ஆய்வில், 10,000 பேரை ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்ய யும் பணிகள் நடந்து வருகிறது என்றார்.
No comments:
Post a Comment