மின் கட்டண மானியம் வங்கி கணக்கில் போடப்படும்: தமிழக அரசு முடிவு முதலில் சென்னை மாநகரில் அமல்படுத்தப்படும்

தமிழ்நாட்டில் ஒரு கோடியே 92 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. இதில் சுமார் 80 லட்சம் மின் இணைப்புகள் சென்னை மாநகரில் இருக்கிறது.
மின் நுகர்வோர்களுக்கு தமிழக மின்வாரியம் இரண்டு விதமான மானியங்களை வழங்கி வருகிறது. விவசாயிகள் மற்றும் குடிசைகளில் வாழ்ப்பவர்களுக்கு இலவசமாகவும் மானியமாகவும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு இரண்டு விதமானியம் கொடுக்கப்படுகிறது.
2014-ம் ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்ட போது 500 யூனிட் வரை உபயோகிப்பவர்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டது. அது போல கடந்த ஆண்டு அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்ததும், முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தார்கள்.

இலவச மின்சாரத்துக்கான பணத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு தமிழக அரசு மானியத் தொகையாக ஆண்டு தோறும் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு தமிழக அரசு ரூ.8131.56 கோடியை மானியமாக வழங்கியது.
நடப்பாண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு தமிழக அரசு ரூ.8538.14 கோடியை மானியமாக கொடுக்க வேண்டும் என்று நிதிநிலை அறிக்கையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் தமிழக அரசு வருவாய் இழப்புகளை சந்திக்கும் சூழலில் உள்ளது. எனவே மின்சாரத்துக்கு மானியம் வழங்குவது தமிழக அரசுக்கு சுமையாக உள்ளது.
மின்சார மானியத்தை ஒழுங்குப்படுத்தவும், சுமையை குறைக்கவும் தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் அடிப்படையில் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி மின் நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் மானியத்தை நேரடியாக அவர்களுக்கே அவர்களது வங்கி கணக்குகளில் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு நாம் எப்படி அரசிடம் இருந்து வங்கி கணக்கில் மானியத் தொகையை பெறுகிறோமோ அதை போல, மின்சார கட்டணத்துக்கான மானியத்தை பெற முடியும். இதற்கான பரிந்துரையை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விரைவில் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் ஒப்படைக்க உள்ளது.
அந்த பரிந்துரைக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஒப்புதல் வழங்கியதும், மின்சார மானியம் மக்களுக்கு வழங்கும் திட்டம் தொடங்கும்.
இதுபற்றி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “மின்சார மானியத்தை மக்களுக்கு நேரடியாக வழங்கும் திட்டம் முதலில் சென்னை மாநகரில் அமல்படுத்தப்படும். பிறகு மற்ற பகுதிகளுக்கு விரிவு படுத்தப்படும்” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “இந்த திட்டத்துக்கு முதலில் மின் நுகர்வோர்களின் கணக்கு எண்கள் அனைத்தும் அவரவர் வங்கி கணக்குடன் இணைக்கப்பட வேண்டும். அதன் பிறகே இந்த திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்த முடியும் என்றார்.
மின்சார மானியத்தை வங்கி கணக்குகளில் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டால், பொதுமக்கள் இனி தங்களுக்கான மின் கட்டணத்தை முழுமையாக முதலில் செலுத்த வேண்டும். அதன் பிறகே அவர்கள் தங்கள் மானிய தொகையை வங்கி கணக்கில் பெற முடியும்.
இந்த திட்டம் காரணமாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு வருவாய் வரத்து திருப்தி தரும் வகையில் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி மாலைமலர்

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click