வீடுகளில் 100 யூனிட் இலவச மின்சாரம்: இன்று முதல் முழு கட்டண சலுகை

வீடுகளுக்கு, 100 யூனிட் இலவச மின்சார வழங்கும் திட்டத்தின் கீழ், இன்று முதல் முழு கட்டண சலுகை கிடைக்க உள்ளது.
சட்டசபை தேர்தலை ஒட்டி, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'வீடுகளுக்கு, 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று, மே, 23ல், மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். அவர், அன்றைய தினம், 100 யூனிட் இலவச மின்சாரம் உட்பட, ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி, இலவச மின்சார திட்டம், மே, 23ல் 
இருந்து செயல்பாட்டிற்கு வந்தது.மின் வாரியம், வீடுகளில், 60 நாட்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கிறது. இந்த சலுகை திட்டம் அமலுக்கு வந்த, 60 நாட்களுக்கு பின் தான், முழு கட்டண சலுகைகிடைக்கும்.

உதாரணமாக, ஒருவரின் வீட்டில், ஜூன், 15ம் தேதி, மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்பட்டது. திட்டம் துவங்கிய மே, 23ம் தேதியில் இருந்து, ஜூன், 15 வரை, 23 நாட்கள் வருகிறது. அந்த, 23 நாட்களை, 60ல் வகுத்து, 100 என்ற எண்ணால் பெருக்கும் போது, 38 யூனிட் வரும். அந்த யூனிட்களுக்கு மட்டும் கட்டண சலுகை வழங்கப்பட்டது.
இந்த நிலையில், 100 யூனிட் இலவச மின்சார திட்டம் அமலுக்கு வந்து, இன்று உடன், 60 நாட்கள் நிறைவடைகிறது. இதனால், இன்றுமுதல், முழு கட்டண சலுகை கிடைக்க உள்ளது.
இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தமிழகத்தில், 1.91 கோடி வீடுகளுக்கு, 100 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும். இதன் மூலம் மின் வாரியத்திற்கு, ஆண்டுக்கு, 1,607 கோடி ரூபாய் செலவாகும். இந்த மானிய தொகையை, தமிழக அரசு, மின் வாரியத்திற்கு வழங்கும்' என்றார்

No comments: