வீடு வாங்க அல்லது கட்ட முடிவு செய்துவிட்டீர்களா? வங்கியில் வீட்டுக் கடனை வாங்கித்தானே வீடு வாங்க அல்லது கட்டப் போகிறீர்கள்? உங்கள் வீட்டில் கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிறீர்களா? ஆம் என்றால், நீங்கள் இருவரும் இணைந்து வீட்டுக் கடன் வாங்கலாமே!
கூடுதல் கடன்
வீடு கட்ட முடிவு செய்ததுமே பலருக்கும் இருக்கும் ஒரே கனவு, எல்லா வசதிகளையும் புதிய வீட்டில் ஏற்படுத்திவிட வேண்டும் என்பதுதான். ஆனால், அதற்கான பட்ஜெட்டைப் போடும்போது செலவு அதிகமாகக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கலாம். இந்தத் தொகையை வங்கியில் அப்படியே கேட்கும்போது, எதிர்பார்க்கும் தொகையை வங்கிகள் கொடுத்துவிடுவதில்லை. ஒருவேளை கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் சென்று மாதச் சம்பளம் பெறுபவர்களாக இருந்தால், பிரச்சினையே இல்லை. அதிகமாக வீட்டுக் கடனை வங்கியில் பெற்றுக் கொள்ளலாம். கணவன் - மனைவி இணைந்து வாங்குவதில் இதுதான் மிகப்பெரிய நன்மை.
பொதுவாக வீட்டுக் கடன் வாங்கும்போது கடன் வாங்கும் நபர் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் நிகர சம்பளத்தை வங்கிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளும். இதை வைத்துதான் எவ்வளவு கடன் வழங்கலாம் என்பதை வங்கிகள் தீர்மானிக்கும். கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து கடன் வாங்க விண்ணப்பித்தாலும் இதே முறைதான் கடைப்பிடிக்கப்படும். இருவரின் சம்பளத்தையும் கணக்கில் கொண்டே கடன் தொகையை வங்கிகள் நிர்ணயிக்கும். இதை ‘மாத நிகர வருமானம்’ என்று சொல்வார்கள். பொதுவாகத் தனி நபராகப் பெறும் வீட்டுக் கடனைவிட இந்தத் திட்டத்தில் அதிகமாக வங்கிகள் கடன் கொடுக்கும்.
என்னென்ன வேண்டும்?
இணைந்து கடன் வாங்கும்போது வங்கி ஸ்டேட்மென்ட், சம்பளச் சான்றிதழ், கடந்த 3 ஆண்டுகளில் தாக்கல் செய்த வருமான வரி விவரங்கள் உள்ளிட்டவையோடு வழக்கமாகக் கேட்கப்படும் சான்றிதழ்கள் அனைத்தையும் வங்கியில் வழங்க வேண்டும். இதன் பிறகு பலகட்ட சரிபார்ப்பு பணிகளுக்குப் பிறகு வயது, சொத்து, வீடு கட்டப்போகும் அல்லது வாங்கப்போகும் இடத்தின் மதிப்பு, கடனைத் திரும்பச் செலுத்தும் திறன் உள்ளிட்டவற்றை வைத்துக் கடன் தருவது பற்றி வங்கிகள் முடிவு செய்யும்.
இணை கடன்தாரர்
இந்த இடத்தில் ஒரு சந்தேகம் ஏற்படலாம். பொதுவாக வீடு கட்டப்படும் மனை யார் பெயரில் இருக்கிறது, அல்லது யார் பெயரில் வீடு வாங்குகிறார்கள் என்பதைப் பார்த்து அவர்களுக்குத்தானே வீட்டுக் கடன் கொடுப்பார்கள் என்று நினைக்கலாம். உண்மைதான். “ஒருவேளை கணவன் பெயரில் மனை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இப்போது மனைவியை ‘கோ ஃபாலோயர்’ எனப்படும் இணை கடன்தாரராக வங்கிகள் நிர்ணயித்துவிடும். இப்படி நிர்ணயிக்கும்போது இருவரும் இணைந்து வீட்டுக் கடன் பெறுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று கூறுகிறார் முன்னாள் வங்கி அதிகாரி கோபாலகிருஷணன்.
கைத்தொழில் செய்தால்...
இதேபோல் இன்னொரு சந்தேகமும் இருக்கும். மாதச் சம்பளம் வாங்கும் மனைவி மட்டுமே இப்படிக் கணவனுடன் இணைந்து வீட்டுக் கடன் பெற முடியுமா? வேறு கைத்தொழில் செய்யும் மனைவி கணவனுடன் இணைந்து வீட்டுக் கடன் பெற முடியாதா என்றும் சந்தேகம் எழலாம். கைத்தொழில் செய்பவர்களும்கூட இணைந்து வீட்டுக் கடன் வாங்க முடியும் என்றும் கூறுகிறார் கோபாலகிருஷணன்.
“இந்த முறையில் மனைவி சம்பாதிக்கிறார் என்பதை வங்கியிடம் நிரூபிக்க வேண்டும். அதுதான் முக்கியம். ஒருவேளை மனைவி கைத்தொழில் மூலம் தினமும் ரூ.200, ரூ.300 சம்பாதிக்கிறார் என்றால், அந்தத் தொகையை வங்கியில் தொடர்ந்து டெபாசிட் செய்வது, அடுத்த நாளே எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை. இப்படிச் செய்யும்போது வங்கிக்கு நம்பகத்தன்மை ஏற்படும். இதை வைத்துக்கூட இருவரும் இணைந்து வீட்டுக் கடனைப் பெற முடியும்” என்கிறார் கோபாலகிருஷ்ணன்.
மனைவி வேலையை விட்டால்...
ஒருவேளை குறிப்பிட்ட ஆண்டுக்குப் பிறகு மனைவி ஏதோ ஒரு காரணத்துக்காக வேலையை விட்டுவிட்டால் என்ன ஆகும்? ஒரு பிரச்சினையும் இல்லை. வங்கிக்குச் சென்று, கடன் பெற்றபோது இருவரும் இணைந்து கடன் பெற்றோம் என்றும், இப்போது மனைவி வேலையில் இல்லை என்பதையும் எழுதித் தர வேண்டும். மேலும் தன் மனைவியும், தானும் சேர்ந்து செலுத்திய கடனைத் தான் முழுமையாகச் செலுத்துவதாகக் கணவன் வங்கிக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
வரிச்சலுகை
கணவன் - மனைவி கூட்டாக இணைந்து வீட்டுக் கடன் பெற விண்ணப்பிக்கும் போது, அதிகமாக வீட்டுக் கடன் கிடைப்பது மட்டுமல்ல, இன்னும் சலுகைகளும் இருக்கின்றன. வீட்டுக் கடனுக்குச் செலுத்தும் அசல், வட்டி ஆகியவற்றின் மீது இருவரும் தனித்தனியாக வரிச்சலுகை பெற முடியும். மனைவி வேலையில்லாமல் போகும்போது, முழுப் பணத்தையும் கணவரே செலுத்தினால், அதற்காக முழுச் சலுகையையும் கணவன் பெறவும் முடியும்.
முழு தவணைத் தொகையையும் கணவர்தான் செலுத்தினார் என்பதை மனைவியிடம் நூறு ரூபாய் முத்திரைத் தாளில் எழுதி வாங்கிச் சமர்ப்பிக்க வேண்டும். ஆடிட்டர் உதவியோடு இந்தப் பணியை மேற்கொள்ளலாம்.
கூட்டாகக் கடன் வாங்கும்போது, வீட்டுக் கடனுக்கு எடுக்கப்படும் காப்பீட்டுக்கான ப்ரீமியம் தொகையை இருவரும் பாதியாகப் பிரித்துக்கொண்டு செலுத்தலாம்.
வாரிசுகள்
இந்தக் கூட்டு கடன் திட்டத்தைக் கணவன் - மனைவி மட்டுமே இணைந்து பெற முடியும் என்று நினைக்க வேண்டாம். கணவன், மனைவி அல்லது தந்தை, மகன் என வாரிசுகளும் இணைந்தும்கூட வாங்கலாம்.
No comments:
Post a Comment