தொழிற்சாலைகளுக்கு புதிய மின் இணைப்பு: இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இணைதளத்தில் பதிவு செய்யப்படாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது தினமலர் செய்தி

திருப்பூர்:'தொழிற்சாலைக்கு புதிய மின் இணைப்பு பெற விரும்புவோர், மின் வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய தொழிற்சாலைகளுக்கான மின் இணைப்பு பெற, மின் வாரிய அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு, சில பொறியாளர்கள், 'ஆதாயம்' எதிர்பார்க்கின்றனர்.தர மறுத்தால், குறித்த காலத்தில் மின் இணைப்பு வழங்காமல், அலைக்கழிப்பு செய்கின்றனர். 
இதனால், பலர் பாதிக்கப்படுகின்றனர்.கடந்த, 2016ல், மின் வாரியத்தால், வீடுகளுக்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது, புதிய தொழிற்சாலை மின் இணைப்புக்கும், இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறை வரும், ஜூலை, 1ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது.இதனால், கர்வோரை அலைக்கழிக்க முடியாது. தாமதம் எங்கு ஏற்படுகிறது என்பதை, கம்ப்யூட்டர் மூலம் துல்லியமாக கண்டறிந்து, அதற்கு காரணமானவர் மீது, நடவடிக்கையும் எடுக்க முடியும்.இது குறித்து, திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சண்முகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார் அதில், 'புதிய தொழிற்சாலை மின் இணைப்பு விண்ணப்பங்களை, www.tangedco.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கான நடைமுறை, ஜூலை ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது. எனவே, விண்ணப்பத்துடன் ஆவணங்களும் இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இணைதளத்தில் பதிவு செய்யப்படாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments: