மின் இணைப்பிற்கு, இணைய தளம் வாயிலாக மட்டும், விண்ணப்பிக்கும் திட்டத்தை செயல்படுத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. தினமலர் செய்தி

புதிய மின் இணைப்புக்கு இணையதள வழி திட்டம்

பதிவு செய்த நாள்: அக் 09,2018 23:28

லஞ்சம் கேட்டு, மக்களை அலைக்கழிப்பதை தடுக்க, புதிய மின் இணைப்பிற்கு, இணைய தளம் வாயிலாக மட்டும், விண்ணப்பிக்கும் திட்டத்தை செயல்படுத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.புதிய மின் இணைப்பு பெற விரும்புவோர், மின் வாரிய பிரிவு அலுவலகங்களில், விண்ணப்பம் அளிக்க வேண்டும். அங்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதலாக, லஞ்சம் தருவோருக்கு மட்டுமே, மின் இணைப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக புகார்கள் எழுகின்றன.இதையடுத்து, இணைய தளம் வாயிலாக, புதிய மின் இணைப்பிற்கு விண்ணப்பிக்கும் திட்டத்தை, 2016 ஆக., 5ல், அப்போதைய முதல்வர், ஜெயலலிதா துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால், விண்ணப்ப தேதி, நேரம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும், கம்ப்யூட்டரில் பதிவாகின்றன.இதனால், குறித்த காலத்தில், மின் இணைப்பு வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதுடன், கூடுதல் கட்டணமும் வசூலிக்க முடியாது.அதனால், ஆதாயம் கிடைக்காது என்பதால், சில ஊழியர்கள், இணைய தளத்தில் விண்ணப்பிக்கும் போது, பல குழப்பங்கள் ஏற்படுவதாக, மக்களிடம் தவறான தகவல்களை தெரிவிப்பதாக கூறப்படுகிறது.மின் வாரியமும், அத்திட்டம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. இதனால், இரு ஆண்டுகளில், 4,500 பேர் மட்டுமே, இணையதளத்தில், புதிய மின் இணைப்பிற்கு விண்ணப்பித்து உள்ளனர்.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:அனைவருக்கும் இணையதளத்தை பயன்படுத்த தெரியாது என்பதால் தான், நேரடி விண்ணப்பம் வாயிலாகவும், மனு பெறப்படுகிறது.இணையதளத்தில் விண்ணப்பிக்க செல்வோரையும், விண்ணப்ப வடிவில் விண்ணப்பிக்குமாறு, ஊழியர்கள் வற்புறுத்துவதாக புகார்கள் வருகின்றன.இதனால், பலர் பாதிக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மக்கள் அலைக்கழிக்கப்படுவதை தடுக்க, புதிய மின் இணைப்பிற்கு, இணையதளத்தில் மட்டும் விண்ணப்பிக்கும் முறை செயல்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


No comments: